‘வரிசி‘ சினிமா விமர்சனம்
சைபர் கிரைம் திரில்லர் வரிசையில் புதுவரவாய் வரிசி.
இளம்பெண்களைக் கடத்தி, தனது காமப் பசிக்கு காவுகொடுக்கிற ஒரு மிருகத்திடம், ஹீரோவின் காதலியே சிக்குகிறாள். இது கதை
மொபைல் போனை ஹேக் செய்வது, புதிதாக ஆப் கண்டுபிடிப்பது என தகவல் தொழில்நுட்பத்தில் லெப்ட் ரைட் வாங்கும் ஹீரோ, அந்த இனப்பிறவிக்கு தனது சாப்ட்வேர் மூளையின் உதவியால் சாவைவிட பெரிதாய் தண்டனை தரும் முயற்சியில் இறங்குகிறான். அது என்னவிதமான தண்டனை? அந்த குற்றவாளி யார்? இந்த கேள்விகளுக்கான விடைகளே திரைக்கதை
புதுமுக நாயகன் கார்த்திக் தாஸ் ஹீரோயினை மென்மையாக முத்தமிடுகிறார். காதலி பேராபத்தில் சிக்கியிருக்கும்போது அதைவிட மென்மையாக வில்லனுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். கதாபாத்திரத்தின் தன்மைக்கு பொருந்திப் போகிறது அவரது நடிப்பு. படத்தை இயக்கியிருப்பதும் அவரே!
நடிப்பு பற்றி பெருசா சொல்ல ஏதுமில்லை என்றாலும், அந்த ஒரிஸ்ஸா நாயகி ஷப்னா தாஸ் சிந்தும் வெட்கப் புன்னகையும், கண்களில் வழியும் மென்சோகமும் ஈர்க்கிறது.
அனுபமா குமார், சிபிஐ அதிகாரியாக கிருஷ்ணா, நாயகனின் நண்பர்களாக வருகிறவர்கள் என அத்தனைப் பேருடைய நடிப்பும் நேர்த்தி.
மிதுன் மோகனின் ஒளிப்பதிவு, நந்தாவின் இசை கச்சிதம்.
சமூக வலைதளங்களில் போலியான கணக்கு துவங்கி, பெண்களுக்குத் தூண்டில் (தூண்டிலின் இன்னொரு பெயரே வரிசி) போட்டு அவர்களைச் சீரழிப்பவர்களை எத்தனையோ படங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டியாயிற்று. வாடகைக் கார்களில் பயணிக்கும்போது பெண்களுக்கு என்ன விதமான ஆபத்துகள் வரும் என்பதையெல்லாம் விளக்கி, எப்படியெல்லாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என பல படங்களில் வலியுறுத்தியாயிற்று. ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை. அத்தகைய குற்றங்கள் குறைய வரிசியும் வழிகாட்டுகிறது. அதற்காக படத்தின் குறைகளைப் பொருட்படுத்தாமல் பாராட்டலாம்; வரவேற்கலாம்!