24 மணி நேரமும் புகழ் வெளிச்சம் தன் மீது பரவ வேண்டும், ஊரும் உலகமும் தன்னைப் பற்றியே பேச வேண்டும், வாழ்நாள் முழுக்க பவர்ஃபுல் மனுஷியாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் ஆசைப்படுபவர் வேணி. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த படத்தின் ஒட்டுமொத்த கதை…
வேணியாக அபர்ணதி. கலெக்டராக கரியரை துவங்கி, தேர்தல் அரசியலில் ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உயர்வது வரை தான் நினைத்ததை செய்து முடிக்க எந்த லெவலுக்கும் இறங்குபவராக திமிர், ஆணவம், அகங்காரம் என எல்லாமும் கலந்த கலவையாக ஆளுமை காட்டியிருக்கிறார். தீபா வெங்கட்டின் குரலும் அவரது கேரக்டரை பலப்படுத்தியிருக்கிறது.
ஜான் விஜய் வெற்றுடம்புடன் குளிக்கிறார்; அதே கோலத்தில் குடிக்கிறார். பிரதமர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டுகிறவராக, அபர்ணதியை கொன்று தீர்க்க ஸ்கெட்ச் போடுபவராக வழக்கமான மேனரிஸங்களுடன் வில்லத்தனம் செய்திருக்கிறார்.
அபர்ணதியை பொதுவெளியில் மானபங்கப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குநர் சரவண சுப்பையா.
முதலமைச்சராக இளவரசு, அடிமை அரசியல்வாதியாக லிவிங்ஸ்டன், சீனியர் நடிகை சச்சு என இன்னபிறர் ஏற்ற கேரக்டர்களாக மாறியிருக்கிறார்கள்.
கார்த்திக்ராஜாவின் இசை பங்களிப்பில் சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. எம் எஸ் பிரபு ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக்கியிருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் இது 2042-ல் நடக்கிற கதை என தெரியவரும்போது, ஃபேண்டஸியாக எதையோ புதிதாக பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தால், அரசியல் களத்தில் கட்சிகளுக்குள் நடக்கும் மோதல்களாக சம்பவங்களைத் தொகுத்து எதிர்பார்ப்பை நொறுக்குகிறார் இயக்குநர் ராகுல் அசோக்.
வெஞ்சன்ஸ் – அதுல ஒண்ணுமில்ல; கீழ போட்டுடு!
-சு.கணேஷ்குமார் 
