இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வெயிட்டிங்! -‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ,

அதையடுத்து 50 வது நாள் வெற்றிவிழா திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் சிலம்பரசன் பேசியபோது ”இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ.ஆர்.ரகுமான் சார் இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது.  இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ”இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி” என்றார்.

உதயநிதி ஸ்டாலின், ”வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக  அமைந்ததற்கு இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள் தான் காரணம்.  படத்தை முதலில் நான் தான் பார்த்தேன். பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று சொன்னேன். சிம்பு இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என்றார். அவர் கேட்டுக்கொண்டதால் இந்த படத்தை வெளியிட்டேன். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வெந்து தணிந்தது காடு பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here