இந்த படத்தின் இயக்குநர் வழக்கறிஞராக இருந்தவர்; மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார்! -வில் படத்தின் பிரஸ் மீட்டில் சோனியா அகர்வால் பேச்சு 

சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், எஸ் சிவராமன் இயக்கத்தில் முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வில்.’

இந்த படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் சிவராமன், ”இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார்.

ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்தேன். மிக அற்புதமாக இசையைத் தந்துள்ளார்.

இப்படம் உயில் சம்பந்தப்பட்டது, உயில் பல குடும்பங்களில் பிரச்சனையாக அமைந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

எடிட்டர் லெனின் சார் படம் பார்த்து என்னைப் பாராட்டினார் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கண்டிப்பாக மக்கள் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

விக்ராந்த் இன்வஸ்டிகேடிவ் ஆபீஸராக நடித்துள்ளார். அலிகியா எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்தார் அவருக்கு நன்றி. இது அடிதடி, துப்பாக்கி எல்லாம் வரும் ஆக்சன் படமல்ல. ஃபீல் குட் படம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகை சோனியா அகர்வால் ”இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எனது தம்பி சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். சிவராமன் சாருடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக்கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்.

விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகை அலீகியா ”திரையுலகிற்கு நான் புதியவள். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நன்றி. சோனியா மேடம் கூட நடித்தது நல்ல அனுபவம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here