கோர்ட் டிராமா கதைக்களத்தில், மெல்லிய உணர்வுகளின் தொகுப்பாக ‘வில்.’
ஒரு எளிய குடும்பத்துப் பெண்ணுக்கு, ஒரு பெரும் பணக்காரர் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை உயில் (Will) எழுதி வைத்துவிட்டு போய்ச் சேர்கிறார். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் நான்தான் என ஒரு பெண் கோர்ட்டில் ஆஜராகிறார். அவர் போலியான நபர் என்பதை நீதிமன்றம் கண்டுபிடிக்கிறது. இப்படி ஆள் மாறாட்டத்தில் துவங்கும் ஆரம்பக் காட்சியே சுறுசுறுப்பூட்ட,
அந்த பெண் யார்? அந்த பெண்ணுக்கு அவர் சொத்து எழுதி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவரது பின்னணி என்ன? அவர் எழுதி வைத்த சொத்து கடைசியில் யாருக்கு சொந்தமாகிறது? என்பதெல்லாம் விறுவிறுப்பு தருகிறது.
ஒரு பாவமும் அறியாத தன் தந்தை அவர் வேலை பார்க்குமிடத்தில் 7 லட்ச ரூபாய் களவுபோன வழக்கில் சிக்கிக் கொள்ள அவரை மீட்பதற்காக தன் காதலனிடம் உதவி கேட்டுப் போய் புறக்கணிப்புக்கு ஆளாவது, தோழியின் வழிகாட்டல்படி பணக்காரர் ஒருவரை சந்தித்து பேசிப் பழகி தந்தையை மீட்டெடுப்பது, முறையற்ற வழியில் உருவான குழந்தையைப் பெற்று மன வேதனையோடு வேறொருவரிடம் ஒப்படைப்பது, அந்த குழந்தையை மீண்டும் கைகளில் ஏந்தும் வாய்ப்பு கிடைக்கும்போது பரவசமடைவது என கதையின் நாயகி அலேக்கியாவின் உணர்வுபூர்வமான நடிப்புக்கு மதிப்பெண்களை வஞ்சனையின்றி வாரிக் கொடுக்கலாம். அந்த ஒடிசல் தேகமும் ஒடுங்கிய கன்னங்களும் அவரது கண்ணீரிலும் கவலையிலும் புரள்கிற கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதையும் சொல்லியாக வேண்டும்.
வட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு மாறுதலில் வந்த நீதிபதியாக, தழிழ்நாட்டையும் தமிழர்களையும் மதிக்கும் எண்ணம் கொண்டவராக சோனியா அகர்வால். வழக்கு விசாரணையில் கம்பீரம் காட்டுவது, யாருக்கோ போக வேண்டிய சொத்துக்கு யாரோ ஒருவர் சொந்தம் கொண்டாடுவதை கண்டறிந்து கண்டிக்கும்போது கண்களில் அனல் பறக்கச் செய்வது என முகபாவங்களால் தனது கேரக்டருக்கான மதிப்பைக் கூட்டுகிறார்.
கோடீஸ்வரர், ஆனாலும் குடும்பத்தில் சிலருக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர், பெண்கள் விஷயத்தில் அப்படியும் இப்படியும் இருக்க விரும்புகிறவர், அப்படி இருந்து அத்துமீறியதற்காக குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி கோடிக்கணக்கில் நஷ்டஈடு கொடுக்க முன்வருபவர்… அப்படியொரு இவரு நல்லவரா கெட்டவரா டைப் கேரக்டரில் பதம் வேணுகுமாரின் தோரணையான நடிப்பு பலம்.
நீதிபதியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இயங்குகிற காவல்துறை அதிகாரியாக, 2 கோடி ரூபாய் உயில் விவகாரத்தில் உண்மையைக் கண்டறியும் பொறுப்பை ஏற்று கடமையைச் சரியாக செய்து முடிக்கிற விக்ராந்தின் அளவான நடிப்பு தனித்து தெரிகிறது.
கதைநாயகியின் தந்தையாக போஸ் வெங்கட், அவரது மேலாளராக லொள்ளுசபா சாமிநாதன், நாயகியின் தோழியாக வருகிறவர், காவல்துறை உயரதிகாரியாக பாய்ஸ் ராஜன் என இன்னபிற நடிகர் நடிகைகள் ஏற்ற பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
சோனியா அகர்வாலின் சொந்த தம்பி சௌரப் அகர்வாலின் இசை காட்சிகளின் தன்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.
ஆந்திரப் பிரதேச சித்தூரின் பிரமாண்டம், கோத்தகிரியின் பசுமை சூழ்ந்த மலைப் பாதை, வளைந்து நெளிந்து உயரும் சாலைகள் என கதை நிகழ்கிற இடங்களின் அழகை தன் கேமரா கண்களால் மெருகேற்றித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி எஸ் பிரசன்னா.
‘ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிய தன் தந்தையைக் காப்பாற்ற ஒரு மகள் போகக்கூடாத எல்லை வரை போகிறாள்’ என்கிற கனமான கதையை எடுத்துக் கொண்டு, கிரைம் திரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்து பரபரப்பான அனுபவம் தந்திருக்கிற இயக்குநர் எஸ் சிவராமன் (வழக்கறிஞராக பணிபுரிந்த அனுபவமுள்ளவர்) கிளைமாக்ஸில் உணர்வுகளைக் கிளறி சிலிர்ப்பூட்டுகிறார்!
வில் _ உருவாக்கம் பவர்ஃபுல்!
-சு.கணேஷ்குமார்