பெண்கள் குறிப்பிட்ட சில விபரீதங்களில் சிக்குவதற்கு, சுதந்திரமாக இருக்கிறோம் என்கிற பெயரில் அவர்கள் நடந்துகொள்ளும் விதமே காரணம் என்பதை ‘உடை’த்துச் சொல்லியிருக்கும் படம்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண். அந்த கொலைக்கு காரணம் யார்? நடந்த சம்பவம் என்ன? எங்கு நடந்தது? என்றெல்லாம் போலீஸ் தோண்டித் துருவ, இவர்கள் அவர்கள் என யாரெல்லாமோ சந்தேகப் பட்டியலுக்கு வருகிறார்கள். கடைசியில் படுபாவிகளாக அடையாளம் காட்டப்படும் நபர்களைப் பார்த்தால் தூக்கிவாரிப் போடுகிறது… இயக்கம் ராஜவேல் கிருஷ்ணா
இன்ஸ்பெக்டராக வருகிற ராஜ்குமார் நாகராஜ் தன் மகளுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தால் மனதளவில் நொறுங்கிப் போய், தவறானவர்கள் கண்ணில் பட்டால் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசமாக அடித்துத் துவைக்கிற வேலையை ஆக்ரோஷமாக செய்திருக்கிறார்.
சின்னத்திரை ரக்சிதா மகாலெஷ்மிக்கு குற்றவாளிகளிடம் சீறுகிற சப் இன்ஸ்பெக்டர் வேடம். யூனிஃபார்ம் அட்டகாசமாகப் பொருந்தி கம்பீரத்தைக் கொடுக்க நடிப்பிலும் கம்பீரத்தைக் கலந்து பரிமாறியிருக்கிறது அந்த பிக்பாஸ் பட்டாம்பூச்சி!
அபி நட்சத்திராவுக்கு காம வெறியர்களால் ஆபத்து வருவது புதிய விஷயமில்லை. அந்த வகையில் முன்பே ஒன்றிரண்டு படங்களில் அனுபவித்த கொடுமைகளை மீண்டுமொருமுறை அனுபவித்திருப்பது பரிதாபப்பட வைக்கிறது.
அம்ரிதா ஹல்டருக்கு இளவட்டத்திலிருந்து கிழவட்டம் வரை சூடாக்கி மூடாக்கி, பின் தன் தவறை உணர்ந்து வருந்துகிற பொறுப்பு. அதை கவர்ச்சிக்கு பஞ்சமின்றி கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்.
பொஸஸிவான பெண்ணைக் காதலித்தால் என்ன மாதிரியான அவஸ்தைகள் வந்து சேரும் என்பதை காண்பிப்பதற்காக உருவாக்கியது போலிருக்கிறது ஆனந்த் நாக்கின் கேரக்டர். அவர் அதை ஆடியன்ஸுக்கு சரியாக கடத்தியிருக்கிறார்.
எம் எஸ் ராஜ் பிரதாப்பின் பின்னணி இசை, டி ஜே பாலாவின் ஒளிப்பதிவு கதையின் தன்மையோடு கலந்திருக்கிறது.
கதையில் புதிய விஷயங்களை தேட வேண்டியிருக்கிறது, கவனம் ஈர்க்கும் அம்சங்களும் குறைவுதான். அதையெல்லாம் தாண்டி ‘பாலியல் வன்முறையில் அவர்தான் ஈடுபடுவார் இவர்தான் ஈடுபடுவார் என வரையறுக்க முடியாது; தாதாக்களும் தப்பு செய்யலாம்; தாத்தாக்களும் தப்பு செய்யலாம்’ என்பதை எடுத்துக்காட்டி, பெண்கள் அதையெல்லாம் புரிந்து நடந்து கொள்வது அவசியம் என கருத்து சொல்லியிருக்கிற இயக்குநரின் சமூக அக்கறையை பாராட்டாமல் விட முடியாது.
எக்ஸ்ட்ரீம் _ மனிதர்கள் ஜாக்கிரதை!
-சு.கணேஷ்குமார்

