சமந்தாவின் ‘யசோதா’ படத்துக்கும் இந்த படத்துக்கும் வேறுபாடு இருக்கிறது! -‘யூகி’ திரைப்பட விழாவில் கதாசிரியர் பாக்கியராஜ் பேச்சு

கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘யூகி.’
பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், UAN Film House தயாரிப்பில் இந்த படம் வாடகைத் தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக உருவாகியுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் நவம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதையொட்டி, இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் நடிகர் கதிர், ” ‘சுழல்’ வெப்சீரிஸ் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்த கதை வந்தது. போலீஸ் வேடம் திரும்ப பண்ணக்கூடாது என இருந்தேன். ஆனால், கதை மிகவும் பிடித்திருந்தது. நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக்கூடிய கதை. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். இந்தப்படம் மிக வித்தியாசமாக இருக்கும். பாக்கியராஜ் அட்டகாசமாக கதை எழுதியுள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

‘கயல்’ ஆனந்தி, ” ‘கயல்’ படம் வந்து 8 வருடம் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. யூகி படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இந்தபடம் பண்ணும் போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகை பவித்ரா லக்‌ஷ்மி, ”முதல் முறையாக ஒரு ஆடியோ லாஞ்ச். யூகி படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அறிமுகமான சீக்கிரத்தில் இருமொழி படத்தில் நடிப்பது மிகப்பெரிய கொடுப்பினை. இந்தப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது.” என்றார்.

கதாசிரியர் பாக்கியராஜ், ” ‘யசோதா’ படம் வாடகை தாய் கதை என்றவுடன் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், அந்த படம் பார்த்த பிறகு நிம்மதி வந்தது. காரணம் அது முழுக்க வேற கதை. இப்படம் மனித உறவுகளை பற்றிய கதை. இதில் எமோஷன் நிறைய இருக்கும். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை இப்படம் ஏமாற்றாது” என்றார்.

நடிகர் நட்டி, ”நீங்கள் நினைப்பது போல் இந்தப்படம் இருக்காது உங்களை நிறைய ஆச்சர்யபடுத்தும்” என்றார்.
நடிகை ஆத்மிகா, ”நீண்ட காலம் கழித்து தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. மிக நல்ல திரைக்கதை. இக்கதையில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான பாத்திரம். முதலில் செய்வது கடினமாக இருந்தது. சவாலாக முயன்று செய்துள்ளேன்” என்றார்.

நடிகர் நரேன், ” ‘கைதி’ படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திரம். இந்தக்கதையும் அந்த மாதிரி தான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்று தான் கதை கேட்டேன். ஆனால் கதையை இயக்குநர் சொன்ன விதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அதனால் நடித்தேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here