தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்திலுள்ள சங்க அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நடந்தது. திரைப்பட இயக்குநர்கள் சற்குணம், ரா வெங்கட், சரவண சக்தி ஆகியோர் கலந்துகொண்டு உதவி இயக்குநர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்கள்.
நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் முஜீப், ”இந்த சங்கத்தில் 400க்கும் மேற்பட்டோர், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்தும் திரைப்படத்துறையில் உதவி இயக்குநர்களின் அடையாளமும், அங்கீகாரமும், உரிமையும் முழுமையாக கிடைக்காமல் உள்ளது. இந்த சங்கத்தின் மூலம் உதவி இயக்குநர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தொழிலாளர் சம்மேளத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம்” என்றார்.