அருண்விஜய் சிங்கிள் ஷாட்டில், 3 1/2 நிமிட சண்டை காட்சியில் நடித்தார்! -‘யானை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சஞ்ஜீவ் பேச்சு

தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்து தனக்கென தனி அடையாளத்தை சம்பாதித்து வைத்திருக்கிற அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான ‘யானை’ திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குனர் ஹரி, ”நானும், அருண் விஜய்யும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். இப்போதுதான் அமைந்தது. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல் அவர்கள்தான். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை.

கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்கு பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது, அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன். சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குனர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும்” என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது ”நானும், இயக்குனர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். அதற்கேற்ற கதைக்களம் அமைந்ததும் இணைந்தோம். யானை போல் சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். படத்தின் ஆக்‌சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது. பல இடங்களில்  இப்படத்தை எடுத்துள்ளோம். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்” என்றார்.

நடிகை பிரியா பவானி சங்கர், ”இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமான படம்” என்றார்.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல், ”இயக்குனர் ஹரியுடன் பணியாற்றுவது எனது பல நாள் கனவு, இந்த படம் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அவர் தயாரிப்பாளரின் இயக்குனர்” என்றார்.

நடிகர் சஞ்ஜீவ், ”கண்டிப்பாக இந்த படம் அருண் விஜய்க்கு பெரிய மைல்கல்லாக இருக்கும். நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம், இந்த படத்தில் அருண் விஜய் சிங்கிள் ஷாட்டில், 3.30 நிமிட சண்டை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அது மிகப்பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here