‘இந்த ஊருக்கு நான்தான் வீரனா இருக்கணும்; இந்த மக்களுக்கு நான்தான் தலைவனா இருக்கணும்’ என்று சொல்லிக்கொண்டு அராஜக அக்கிரமம் செய்கிற ஒருவரும், ‘உலகத்துல இருக்கிற அத்தனை தலைவர்களையும் உருவாக்குற வாத்தியார் நாங்க’ என்று கெத்தாக சொல்லிக்கொள்கிற ஆசிரியர் ஓருவரும் மோதிக் கொள்ளும் கதை.
ராஜலிங்கம் சாதிவெறி பிடித்தவர்; ரவுடியிஸத்தில் ஊறிக் கொண்டிருப்பவர்; டாஸ்மாக்கில் பார் நடத்துபவர். அவருக்கு அவரது மகனே எதிரியாகிறான். ஊருக்குள் இருக்கும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்துகிறான். அதன் விளைவாக மதுக்கடை மூடப்படுகிறது. தனது கீழ்சாதிக்கார நண்பனை தனக்கு சமமாக நடத்துகிறான். அப்படியெல்லாம் அப்பாவை எதிர்த்து புரட்சி செய்கிற அந்த மகன் இளைஞனா என்றால் இல்லை; நடுத்தர வயது நபரா என்றால் அதுவுமில்லை. ஆறாவதோ ஏழாவதோ படிக்கிற சிறுவன்.
அவன் எப்படி அத்தனை துணிச்சலாக செயல்படுகிறான்? அவனுக்குள் புரட்சிகர சிந்தனைகளையும் துணிச்சலையும் புகுத்துவது அவனுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர். அவனை மதுக்கடைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கச் செய்ததும் அவர்தான். அவர் உயர் சாதிக்காரராக இருந்தாலும் சாதி வேறுபாடு பார்க்காதவர். சாதிவேறுபாடு பார்க்கிறவர்களை கண்டிக்கிறவர். அவர் அப்படியிருப்பதால், தன் மகனை தனக்கு எதிராக செயல்பட வைப்பதால் ராஜலிங்கம் அவரை எதிரியாக நினைக்கிறார். அவரை ஊரைவிட்டுத் துரத்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கிறார்.
அந்த சமயமாகப் பார்த்து, அந்த ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவர் பணியில் சேர்கிறார். இருவரும் சிரித்துப் பேசி பழகுகிறார்கள்; பழக்கம் நெருக்கமாகிறது. ராஜலிங்கம் அதை வைத்து ஆசிரியரை பழிவாங்க, அவமானப்படுத்தி துரத்த திட்டமிடுகிறார்.
திட்டமிட்டபடி செய்ய முடிந்ததா? ஆசிரியரை துரத்த முடிந்ததா? என்பதெல்லாம் மீதிக் கதை…
ஆசிரியராக பிரபாகரன். கிராமத்தில் நடக்கும் கதைக்குப் பொருத்தமான முகத்துடன் இருப்பவர் ‘சாதிப் பாகுபாடு கூடாது’, ‘மூட நம்பிக்கை கூடாது’, உணவென்பது அவரவர் விருப்பம். சாப்பிடும் உணவை வைத்து யாரும் யாரையும் தாழ்வாக கருதக்கூடாது’, ‘பிளாஸ்டிக்கை எரித்து காற்றை மாசுபடுத்தக் கூடாது’, ‘படிக்கிற வயதில் காதல் கீதல் என சிக்கிக் கொள்ளக்கூடாது’ என்றெல்லாம் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பாடம் எடுப்பதை முழு நேரப் பணியாகச் செய்கிறார். ஆசிரியையுடன் ஆட்டம் பாட்டம் என ஜாலியாகவும் பொழுதைக் கழிக்கிறார். நடிப்பிலும் சரி, டயலாக் டெலிவரியிலும் சரி துளியும் அலட்டலில்லை. அதனாலேயே அவரது கதாபாத்திரம் கவனம் பெறுகிறது. அவர் ஓயாமல் கருத்து சொல்லிக்கொண்டேயிருப்பது கொஞ்சம் அதிகப்படியாக தோன்றினாலும், அவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதற்கான அவசியம் இருப்பதால் தவறில்லை என்று தோன்றுகிறது.
ராஜலிங்கமாக (இந்த படத்தை இயக்கியிருக்கிற) லெனின் வடமலை. நல்ல விஷயங்களை செய்யப் பிடிக்காது; நல்ல விஷயங்களை செய்பவர்களையும் பிடிக்காது; கூடவே சாதிவெறி. அத்தனையும் கலந்த மொத்த உருவமாக காட்டியிருக்கும் வில்லத்தனம் கம்பீரம்.
‘யப்பா டேய், உன் வயசுக்கு நீ பேசுற பேச்சும் நடந்துக்கிற விதமும் ஓவர்டா’ என உள் மனசுக்குள் ஒரு எண்ணம் ஓட வாய்ப்பிருக்கிறது. அந்தளவுக்கு நடித்திருக்கிறார்; சில காட்சிகளில் சீறிப் பாய்ந்திருக்கிறார் பள்ளி மாணவனாக வருகிற துபின் சேகுவேரா. நடிப்பில் மட்டுமல்ல பெயரிலும் புரட்சியை வைத்திருக்கும் அவர் வேகவேகமாக வசனங்களை உச்சரிக்கும்போது போடா என்பது போதா என்பது போலவும், உரம் என்பது உதம் என்பதுபோலவும் செவிகளை வந்தடைகிறது. அந்த கேரக்டருக்கு எதற்கு கதையில் அத்தனை முக்கியத்துவம் என்று பார்த்தால், அந்த சிறுவன் படத்தை இயக்கியிருப்பவரின் சொந்த மகனாம். எது எப்படியிருந்தாலும் அந்த கதாபாத்திரம் மூலம் எடுத்துச் சொல்லியிருக்கிற கருத்து அத்தனையும் ஏற்கத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆசியராக வருகிற மேகாலி மீனாட்சி, போலி செய்ய பிசைந்துவைத்த மேல் மாவு போலிருக்கிறார். கிளைமாக்ஸில், கதைநாயகனின் போராட்டத்துக்கு துணை நிற்கிறார். அதற்கு முன்னதாக டூயட் பாடலில் அவருக்கு முத்தமிட்டு கதகதப்பூட்டுகிறார். உடலின் செழுமையாக பாகங்களை பாரபட்சமின்றி காட்டும் அந்த முதலிரவுப் பாட்டு செம ஹாட்டு. அம்மணியின் உடம்பு தளதளப்பு என்றால் அணிகிற உடையெல்லாம் அத்தனை பளபளப்பு.
மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் கதை நிகழும் மண்ணுக்கு நெருக்கமான முகங்களாக இருப்பது காட்சிகளை உயிரோட்டமாக வைத்திருக்க உதவுகிறது.
‘செத்ததுக்கு அப்புறம் பாடைய வேணா மத்தவன் கட்டலாம்; ஆனா உசுரோட இருக்கும்போது நமக்கான மேடையை நாமதான் போட்டுக்கணும்’ என்றெல்லாம் வந்து விழும் வசனங்கள் மனதில் பதிகின்றன.
சௌந்தர்யன் இசையில் சத்யபிரகாஷ் _ ரீட்டா குரலில் ‘அச்சச்சச்சோ மனசும் வந்துச்சோ’ பாடல் தென்றலின் இதத்தை தர, நெருப்புச் சொற்களைக் கோர்த்து லெனின் வடமலை எழுதிய ‘ரத்தம் தேடி ஓடு ஓடு’ பாடல் சிலிர்ப்பூட்டுகிறது. ‘தேனிருக்கும் இடத்த’ பாடலை கானா பாலா குரலில் கேட்பது இனிமை. ‘புதையல் பெண்ணே’ பாடலுக்கு குத்தாட்டம் போடுபவரின் கவர்ச்சி கிறக்கம் தருகிறது.
நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட வீடுகள், பசுமையான வயல்வெளிகள், பள்ளிக்கூடம், மலை முகடுகளுக்கிடையில் பாய்ந்தோடும் நீர்ப்பரப்பு என பலவற்றையும் அழகியல் உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி ஜெரின்.
கருத்து சொல்வதை நோக்கமாக கொண்டு படத்தை இயக்கியிருக்கும் லெனின் வடமலை ஆடியன்ஸுக்கு அலுப்பு சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க கமர்சியல் அம்சங்களை சரியான விகிதத்தில் கலந்திருக்கிறார்.
யாரு போட்ட கோடு _ மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான ரோடு!
-சு.கணேஷ்குமார்

