அரசின் மக்கள் விரோதப் போக்குக்கெதிராய் கொந்தளித்துக் கொதிக்கும் படங்களில் வரிசையில் இன்னொரு படம்! இயக்குநர் ருத்ரனின் நியாயமான கோபம் தாண்டவமாடியிருக்கும் ‘ரூ 2000.’
அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுக்க பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மிகப் பெரிது. அதை மையப்படுத்திய கதைக்களம்!
அந்த வயது முதிர்ந்த விவசாயி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப் போகிறார். மெஷினில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே வருகிறது. அதை எடுத்துக் கொண்டு, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது பச்சிளம் குழந்தையின் சிகிச்சைக்காக மருந்து மாத்திரைகள் வாங்கச் செல்கிறார். அந்த ரூபாய் நோட்டில் யாரோ பேனாவால் கிறுக்கியிருக்க, அதை காரணம் காட்டி ‘இந்த பணம் செல்லாது’ என்று சொல்லி சொல்லி மருந்துகளைத் தர மறுக்கிறார் மெடிக்கல் ஷாப் முதலாளி. சரி, பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றலாம் என்றால் சம்பந்தப்பட்டவர் போலீஸில் சிக்கிக்கொள்கிற அளவுக்கு நிலைமை விபரீதமாகிறது. மருந்துகள் கிடைக்கத் தாமதமாவதால் குழந்தை மூச்சை நிறுத்திக் கொள்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்காக, கம்யூனிஸ்ட் இயக்கப் பற்றாளரான வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். பேனாவால் கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லுமா செல்லாதா? செல்லாது என்றால் அந்த ரூபாய் நோட்டை ஏ.டி.எம். இயந்திரத்தில் வைத்தது யாருடைய குற்றம்? நேர்ந்த விபரீதத்திற்கு யார் யாரெல்லாம் பொறுப்பு? என்கிற கோணத்தில் நீதிமன்றத்தில் நீளும் வழக்கு விசாரணையில் உயிர்காக்கும் மருந்து எங்களிடம் இருப்பு இல்லை என்று சொல்லும் அரசு மருத்துவமனை மருத்துவர், வங்கிகள் சார்ந்த உயரதிகாரிகள், ஏ.டி.எம். இயந்திரங்களை நிறுவிப் பராமரிக்கும் தனியார் நிறுவனத்தின் உயரதிகாரி உள்ளிட்ட பலரையும் சட்டத்தின் முன் நிறுத்தி நியாயமான கேள்விகளால் துளைக்கிறார் வழக்கறிஞர். வழக்கு விசாரணையின் நீள அகலங்கள் ஊடகங்களில் விவாதப் பொருளாகிறது. அரசாங்கமே திணறுகிற அளவுக்கு நீளும் வழக்கின் முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்…
வழக்கறிஞராக வருகிறவர் அரசின், அரசு சார்ந்த துறைகளின் மெத்தனப் போக்குகளால் பொதுமக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிகமிக விரிவாக, உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி, பொய் சாட்சிகளைத் தோலுரித்து வாதிடுவது படம் பார்ப்போர் மனதில் விழிப்புணர்வைத் தூண்டும் விதத்திலும், நியாயமான சட்டப் போராட்டங்களால் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் விதைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு பெரிதாய் ஒரு பாராட்டுப் பூங்கொத்து!
ஒன்றிரண்டு தவிர ஆங்கிலச் சொற்கள் கலக்காத வசனங்களையே பெரும்பாலான கதாபாத்திரங்கள் பேசுவது படத்தின் தனித்துவம்!
பக்கம் பக்கமாக பேசுவது கொஞ்சம் சற்றே சலிப்பைத் தந்தாலும் தந்தாலும், நல்ல தமிழில் நெய்யப்பட்ட வசனங்களை உச்சரிக்கும் நேர்த்தியால் ஈர்க்கிறார் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற அறிமுக நடிகர் பாரதி கிருஷ்ணகுமார்.
செல்லாத பணத்தால் பாதிக்கப்படுகிறவராக அய்யநாதன், நீதிபதிகளாக தோழர் ஓவியா மற்றும் தோழர் தியாகு, அரசுத் தரப்பு வழக்கறிஞராக ‘கராத்தே’ வெங்கடேஷ், ஜூனியர் வழக்கறிஞர்களாக ருத்ரன் பராசு, ஷர்னீகா… இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு சுமார், சுமாருக்கும் சற்றே மேல் மற்றும் பரவாயில்லை ரகம்! ஷர்னிகாவின் கண்கள் வசனம் பேசுகிறது. தமிழ் சினிமா இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்!
கதைப்படி உயிர்காக்கும் மருந்தின் விலை 500க்குள். கதைப்படி பாதிக்கப்படுகிற மனிதரை வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவராகவோ ஏழையாகவோ காட்டவில்லை. பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வருகிற, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி மணிக்கணக்கில் மக்கள் பிரச்னை, கார்ப்பரேட் கலாச்சாரம், புரட்சி என மணிக்கணக்கில் சரளமாக பேசுகிற இல்லையில்லை உரையாற்றுகிற அறிவுள்ள மனிதர் ரூ. 500 புரட்ட முடியாமல் குழந்தையைப் பறி கொடுக்கிறார். பெரியவரின் அம்மாவும் மனைவியும் போட்டிருக்கிற நகையை அடகு வைத்தாவது குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். இப்படி யதார்த்தத்துக்கு ஒத்துப்போகாத காட்சிகள் நெருடல்!
படத்தின் 90 சதவிகித காட்சிகள் நீதிமன்றத்திலேயே நடைபெறுவது, பிரதான கதையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கிற காதல் கதைக்கான காட்சிகளும் நீதிமன்றத்திலேயே சுற்றிச் சுழல்வது அயர்ச்சி!
மக்களின் பிரச்னையைப் பேசுகிற மிகச் சிறப்பான கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குநர், திரைக்கதையில் சற்றே கூடுதலாக கவனம் செலுத்தி, நாடகத்தனமாக காட்சிகளைத் தவிர்த்து, தேர்ந்த நடிகர்களின் பங்களிப்போடு களமிறங்கியிருந்தால் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும். இன்னொரு ஜெய்பீமாக கூட நிலைத்திருக்கும்!