நடிகர் மாதவன் முதல் முறையாக இயக்கி, தயாரித்துள்ள ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
நம்பமுடியாத வாழ்வினை வாழ்ந்த அறிவியலாளரின் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி உலகம் முழுதும் வெளியாகும் என அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் மாதவன்.
இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் ஆர் மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாராயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , எழுதி, இயக்கியும் உள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணையத்தில் புயலை கிளப்பி, ரசிகர்களிடம் பேரார்வத்தை தூண்டியுள்ளது. மாதவனின் திரைவாழ்வில் மிகப் பெரிய திரைப்படம் என்று சொல்லப்படும் இப்படம், மூன்று வருடங்களுக்குப் பிறகு மாதவன் திரையில் தோன்றவுள்ள படம் என்பதால், ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காணவேண்டுமென பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர், குறிப்பாக அவர் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். பிரமாண்டமான முறையில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.