தமிழக மக்கள் ரஜினிகாந்தை வாழவைத்ததுபோல் இந்த படத்தின் ஹீரோவையும் வாழ வைப்பார்கள்! – ‘லாக் டவுன் டைரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு

ஜாலி பாஸ்டியன் 900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியவர். அவர் இயக்கியிருக்கும் படம் ‘லாக் டவுன் டைரி.’

இந்த படத்தில் ஜாலி பாஸ்டியனின் மகன் ஜாலி விஹான் (அமித்) கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன், ‘பெப்சி’ விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், முத்துக்காளை, நடிகை பிரவீனா, வசனகர்த்தா லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகரன், எஸ்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன், ‘‘தமிழகத்துக்கு ரஜினிகாந்த் வந்தார். அவரை தமிழக மக்கள் வாழ வைத்தார்கள். அவரும் தமிழக மக்கள் மீது பாசமாக இருக்கிறார். அதேபோல் தமிழில் நடிக்க வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோவையும் தமிழக மக்கள் வாழ வைப்பார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு  நன்மை தரக்கூடிய விஷயங்கள் சங்கம் மூலமாக நடக்க உள்ளது. இன்று திரையுலகினர் தயாரிப்பாளர்கள். விநியோகஸ்தர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து தமிழ் திரையுலகுக்கு வேண்டிய நன்மைகள் செய்ய கேட்டுக் கொண்டோம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை திரையுலகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடத்த அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி தந்திருக்கிறார்” என்றார்.

இயக்குநர் ஜாலி பாஸ்டியன், ‘‘900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடனும் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம்.இயக்கி இருக்கிறேன். இரண்டாவதாக இந்த படத்தை தமிழில் இயக்கியுள்ளேன். திரைக்கதையமைத்து, ஸ்டண்ட் அமைத்து இயக்கியுள்ளேன்.

கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில்  மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள். அதையெல்லாம் ஆராய்ச்சி செய்து தொகுத்திருப்பதுடன், இளம் காதல் ஜோடியொன்று அந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது.

இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல குடும்பங்களின் கதையும் உள்ளடக்கியது. உங்கள் எல்லோருக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். குடும்பத்துடன் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். இப்படத்தில் இடம் பெறும் லாக் டவுன் பற்றிய பாடலையும் நான் எழுதியுள்ளேன். வசனத்தை பிரபாகர், எஸ்.பி.ராஜ்குமார் எழுதியிருக்கிறார்கள். திரைப்பட மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு படத்தின் புரொமோஷன் உள்ளிட்ட பணிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்” என்றார்.

கதாநாயகன் ஜாலி விஹான், ‘‘இந்த படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர், ‘‘ஹீரோவின் வளர்ப்புத் தந்தையாக, மெக்கானிக் ஷெட் ஓனராக நடித்துள்ளேன். படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என எல்லாமும் இருக்கிறது” என்றார்.

வசனகர்த்தா பிரபாகரன், ‘‘ஜாலி பாஸ்டியனின் மகன் ஜாலி விஹான் தென்னகத்தில் உள்ள பல ஹீரோக்களுக்கு நிழல் ஹீரோவாக அதாவது டூப் ஹீரோவாக இருந்தவர். அவரை. வைத்து ஜாக்கிஜான் பணியில் ஒரு படத்தை ஜாலி மாஸ்டர் இயக்குவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அருமையான கதையை எழுதி இயக்குகிறார். டாக்சி டிரைவராக விஹான் நடிக்கிறார். ஒரு அழகான காதல், கணவன் மனைவி குடும்ப சூழலில் நிறைவான ஒரு படமாக உருவாகியிருக்கிறது” என்றார்.

நிகழ்வில் நடிகை பிரவீனா, வசனகர்த்தா பிரபாகரன், பாடலாசிரியர் முருகானந்தம், நடிகர் முத்துக்களை, ஒளிப்பதிவாளர் பி கே எச் தாஸ், வசனகர்த்தா லியாகத் அலிகான், ஸ்டண்ட் யூனியன் தலைவர் தவசி ராஜ், ‘பெப்சி’ விஜயன் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here