‘மை டியர் பூதம்’ சினிமா விமர்சனம்

மை டியர் பூதம்’ சினிமா விமர்சனம்

பூதம் பூமிக்கு வந்து அற்புதங்கள் நிகழ்த்தி, மனிதர்களுக்கு உதவி செய்து மகிழ்விக்கிற கதைகளின் நியூ வெர்ஷன்.

அந்த சிறுவனுக்கு திக்குவாய்ப் பிரச்சனை. அதனால், அவன் தன்னுடன் படிக்கும் மாணவர்களின், ஆசிரியர்களின் கேலிக்கு ஆளாகி அவமானப் படுவது தொடர்கதையாக இருக்கிறது. அவனுடைய அம்மாவும் அவன் ஒன்றைச் சொல்ல வர, அதை காதுகொடுத்துக் கேட்காமல், தானாக ஒன்றைப் புரிந்து கொள்பவராக இருக்கிறார்.

நாளுக்கு நாள் மனதளவில் நொறுங்கிப் போகிற அந்த சிறுவன் கையில் கற்சிலையொன்று கிடைத்து, உடைபடுகிறது. பூதவுலகில் சாபம் பெற்று அந்த சிலைக்குள் 3000 வருடகாலம் சிறைப்பட்டிருந்த பூதமொன்று விடுதலை பெற்று வெளிவருகிறது. தன்னை விடுவித்த சிறுவனை தெய்வமாக மதித்து, அவனிடம் சிநேகமாகி, அவனுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்விக்கிறது.

அவன் திக்குவாய்ப் பிரச்சனையிலிருந்து மீள தன்னம்பிக்கை தந்து ஊக்குவிக்கிறது. அதன்மூலம் பள்ளியில் மதிப்பு உயர்கிறது.

அந்த பூதம் தன்னுடையை பூதவுலகிற்கு திரும்பிப் போய், தனது பிள்ளையைப் பார்க்க ஆசைப்படுகிறது. அதற்கு, தனக்கு விடுதலை கொடுத்த சிறுவன் ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பது கட்டாயம்.

திக்குவாய்ச் சிறுவனால் குறிப்பிட்ட அந்த மந்திரத்தை சொல்ல முடிந்ததா? பூதத்தின் ஆசை நிறைவேறியதா? என்பதெல்லாம் மிச்ச சொச்ச கதை… இயக்கம்: ராகவன்

‘கர்க்கி முகி’ என்ற பூதமாக பிரபு தேவா. மொட்டையடித்து, உச்சிக் குடுமியில் ஜடை போட்டு, உடல் மொழியில் குழந்தைத் தனத்தைக் கொண்டு வந்து, கண்களில் கனிவைக் காட்டுகிற பாத்திரத்தில் அப்படியே அள்ளிக் கொஞ்சி முத்தமிடும் அளவுக்கு நடிப்புப் பரிமாணத்தில் வேறொரு அவதாரம் எடுத்திருக்கிறார். நடையும் உடையும் அசத்துகிறது. அவருக்கே உரித்தான ரகளையான, கலர்ஃபுல்லான நடனமும் உண்டு.

சொந்த அம்மா உட்பட தன்னைச் சார்ந்தவர்கள் தன் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வேதனையை பிரதிபலிப்பது, பூதத்தைக் கண்டு பயப்படுவது, பின் அதனுடன் நட்பாகி குஷியாவது, தனக்கு உதவுகிற பூதத்தின் ஆசையை நிறைவேற்ற எப்படியாவது அந்த மந்திரத்தை கொல்லிவிட வேண்டும் என திக்கித் திணறுவது, தன் அம்மா பூதத்தை விரட்டியடித்தபின் கலங்குவது, பூதத்தின் கவலையை தன் கவலையாக்கிக் கொண்டு மனம் உடைவது என உணர்வுகளின் கலவையாய் வருகிற அஸ்வந்தின் நடிப்பைப் பார்க்கையில், அவனுக்குள் குட்டி கமல்ஹாசன் இருந்து, நடிப்பின் மூலம் வெளிப்படுவது போலிருக்கிறது!

கொடுத்த வேலையை சரியாகச் செய்துள்ளார்கள் சிறுவனின் அம்மாவாக வருகிற ரம்யா நம்பீசன், ஆசிரியராக வருகிற சம்யுக்தா உள்ளிட்ட இன்னபிற நடிகர், நடிகைகள்!

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., மருத்துவர் கு. சிவராமன் இருவரும் ஒரேயொரு காட்சியில், அந்த காட்சிக்கு 100% பொருத்தமான நபர்களாக வந்து, தந்திருக்கிற கருத்துக்களில் இருக்கிறது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பாடம்!

படத்தில் ‘குட்டிச் சுட்டீஸ்’களுக்கு பிடித்த இமான் அண்ணாச்சியும் இருக்கிறார். அவரை வைத்து காட்சிகளை எவ்வளவோ கலகலப்பாக்கியிருக்கலாம். அவரை ஊறுகாய் போல் பயன்படுத்தி வீணடித்திருக்கிறார்கள்!

இமான் இசையில் வரிசைகட்டுகின்றன பாடல்கள். மனதை எட்டுபவை ஒன்றிரண்டு மட்டுமே!

தன் குழந்தையின் உணர்வைப் புரிந்துகொள்ளாத, தன் போக்கில் செயல்படுகிற வினோத குணம் படைத்த அம்மா, தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தையின் மனம் சார்ந்த, உடல் சார்ந்த பிரச்சனையை ஏளனம் செய்கிற ஆசிரியர்கள் என கதாபாத்திரங்களைப் படைத்திருப்பது சமூகத்தில் எத்தனையெத்தனை ஏடாகூட மனநிலை மனிதர்கள், குரூர மனநிலை ஆசாமிகள் இருக்கிறார்கள் என புரிந்துகொள்ள உவுகிறது!

பூதத்திற்கு அப்படியொரு முடிவைக் கொடுத்திருக்க வேண்டாம்.

எது எப்படியோ, மை டியர் பூதம் உங்கள் வீட்டு குட்டியர்களையும் சுட்டியர்களையும் குதூகலமாக்கும்; கூடவே மனதில் தன்னம்பிக்கையையும் விதைக்கும். அதில் சந்தேகமில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here