தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மானியம் வழங்க முதல்வரிடம் கோரிக்கை! -‘கண்மணி பாப்பா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 1.12. 2021 அன்று காலை சென்னையில் நடைபெற்றது.

நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் இயக்குனர் ஸ்ரீமணி, “இந்தப்படம் சிறிதாக துவங்கியது. ஆனால் எல்லாரின் உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக்கியிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் மானஸ்வி, தமன் சகோ உள்பட என்னோட டீம் எல்லாரும் நிறைய கஷ்டப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எல்லாருடைய வாழ்க்கைக்கும் பெரிய சப்போர்ட் தேவை. எனக்கு என் மனைவி தான் பெரிய சப்போர்ட் அவருக்கு பெரிய நன்றி” என்றார்.

நடிகர் ஆரி, “சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன். பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன் தான், நான் இங்கு வரக்காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் கண்மணி பாப்பா படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது.  குழந்தை மானஸ்வியை நிறைய படங்களில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும். ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை. இந்தப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார். அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படம் மட்டுமல்ல… இன்னொரு கதையும் சிறப்பாக வைத்திருக்கிறார் என்றார்கள். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன், “எந்தப்படம் வெற்றிப்பெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா?

அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here