ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் படங்களை ஏராளமாய் பார்த்துவிட்ட ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அதேபோன்ற அனுபவம் தர, தாராள செலவில் தயாரான ‘அகத்தியா.’
கதைநாயகன் ஜீவா திரைப்பட கலை இயக்குநர். அவருடைய அம்மா என்ற எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்தை 80 வருடங்கள் முன்பே ஒரு சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ளார் என்ற விவரம் அவருக்கு தெரியவருகிறது.
சிலபல முயற்சிக்கு பின், அந்த மருந்து புதையுண்டிருக்கும் இடத்தை கண்டறிகிற ஜீவா அதை எடுக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிக்கு கிடைத்த பலன் என்ன? அம்மாவை கேன்சரிலிருந்து காப்பாற்ற முடிந்ததா? என்ற கேள்விகளுக்கான பதில்களாய் விரியும் காட்சிகளில் அடுக்கடுக்கான அமானுஷ்ய சம்பவங்களை அடுக்கியிருக்கிறார் இயக்குநர் பா விஜய்.
கதைநாயகன் தன் திறமையைப் பயன்படுத்தி பிரமாண்டமாக செட் போட்டு பேய் வீடாக்கி வருமானம் பார்க்கிற ஆரம்பக் காட்சிகளே எதிர்பார்ப்பைத் தூண்டிவிட, அந்த இடத்தில் நிஜ பேய்களின் அட்டகாசம் தொடங்கும் என எதிர்பார்த்தபடியே நடக்கிறது. அந்த காட்சிகளை தனது துடிப்பான நடிப்பால் நிரப்பியிருக்கும் ஜீவா, அம்மா சென்டிமென்டில் உருக்கமான நபராக வெளிப்படுகிறார்.
பாண்டிச்சேரியை ஆண்டுகொண்டிருக்கும் பிரெஞ்ச் ஆளுநரின் தங்கையைக் குணப்படுத்த மூலிகைகளை அரைத்துப் பிழிந்து மருந்து தயாரிப்பது, மருந்தை தயாரித்தபின் அதே ஆளுநரின் சூழ்ச்சிக்கு ஆளாவது என நீளும் காட்சிகளில் அழுத்தமான, அசத்தலான பங்களிப்பைத் தந்திருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜுன்.
பிரெஞ்ச் ஆளுநராக வருகிற எட்வர்ட் சோனென்ப்ளிக் சர்வாதிகாரியாக கொடூர முகம் காட்டி மிரட்டுகிறார்.
ஜீவாவின் அம்மாவாக ரோகிணி கேன்சர் நோயாளி தோற்றத்தில் பரிதாபத்தை அள்ள, ஹீரோவின் காதலியாக படம் நெடுக பயணித்தாலும் ராஷி கண்ணாவின் நடிப்பில் தாக்கத்தை உருவாக்கும் அம்சம் ஏதுமில்லை.
ரெடின் கிங்ஸ்லியின் பெர்ஃபாமென்ஸ் லேசாக சிரிப்பூட்ட, ஷாரா அவர் பங்குக்கு கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.
யோகிபாபு ஆரம்பக் காட்சியில் மட்டும் அட்டனன்ஸ் போட ராதாரவி, நிழல்கள் ரவி, சார்லி என இன்னபிற நடிகர் நடிகைகள் நேர்த்தியாக நடிப்பைத் தந்து கடந்து போகிறார்கள்.
படத்தின் ஹீரோக்களாக ஜீவா, அர்ஜுன் என இருவர் இருந்தாலும் ரியல் ஹீரோவாக மதிக்கப்பட வேண்டியவர் கலை இயக்குநர் சண்முகம். 80 வருடங்கள் முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதைக்காக அரண்மனை மாதிரியான பங்களா, மருத்துவக்கூடம் என உருவாக்கியதில் பெரும் உழைப்பைக் கொட்டிக் குவித்திருப்பவர், நிகழ்காலக் கதைக்காக பேய் வீட்டை பிரமாண்டமாக அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
இளையராஜாவின் ’என் இனிய பொன்நிலாவே’ பாடல் யுவன்சங்கர் ராஜாவின் ரீமிக்ஸிங்கில் வரும்போது தியேட்டர் உற்சாக மோடுக்கு போய் திரும்புகிறது. பின்னணி இசையில் விசேஷ அம்சங்கள் பிடிபட மறுக்கிறது.
படத்தின் பிரமாண்டத்தை பலமடங்கு அதிகரித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதியின் கேமரா.
சித்த மருத்துவத்தின் சிறப்புகள், மருத்து தயாரிப்பு சூத்திரத்தை சுழ்ச்சியால் கைப்பற்ற நினைக்கும் பிரெஞ்ச் அதிகாரி என நீ…….ளும் பிளாஷ்பேக் காட்சிகள் ஒருவித சோர்வைத் தர, அழுத்தமில்லாத நிகழ்காலக் கதை அயர்ச்சியின் சதவிகிதத்தை அதிகப்படுத்துகிறது.
பெரியளவிலான பொருட்செலவு, பிரபலமான நடிகர் நடிகைகளின் அணிவகுப்பு என எல்லாமிருந்தும்,
சுவாரஸ்யமில்லாத கதை, திரைக்கதை அகத்தியாவை ‘அபத்தம்யா’ என்று சொல்ல வைத்திருக்கிறது.
-சு.கணேஷ்குமார்


