‘குரைக்கிற நாயாகவே இருந்தாலும் அதன் உணர்வைக் குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்ற கூர்மையான கருத்தை சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் ‘கூரன்.’
நாய் ஒன்று தன் குட்டியை கார் ஏற்றிக் கொன்ற நபர் மீது புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசனுக்கு போகிறது. அங்கு அடித்து துரத்தப்பட, அடுத்ததாக கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறது. தன் குட்டியைச் சிதைத்த காரின் நிறம், காரின் நம்பர் என எல்லாவற்றையும் நீதிபதி முன் தெளிவாக சொல்கிறது.
நாய் கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுப்பதெல்லாம் உலகமகா விசித்திரமாக இருக்க, மீடியா பரபரப்பாகிறது. ‘டாக்’ விவகாரம்தான் ‘டாக் ஆஃப் த டவுன்’ என்றாகிறது.
வழக்கறிஞர்களின் வாதமெல்லாம் முடிந்து, தீர்ப்பு நாய்க்கு சாதகமாக அமைகிறது. அது எப்படி சாத்தியம் என்பதுதான் திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்…
குட்டியைப் பறிகொடுத்து தவிப்பதாகட்டும், வழக்கறிஞரை தொடர்ந்து சென்று அவர் மனதில் இடம்பிடிப்பதாகட்டும், உடம்பில் கருவிகளைப் பொருத்திய நிலையில் நீதிமன்றத்தில் தான் பார்த்ததை சொல்வதாகட்டும்… எப்படித்தான் பழக்கப் படுத்தினார்களோ தெரியவில்லை; மனிதர்களைப் போல் பேசுவதை தவிர அத்தனை விஷயங்களையும் அதற்கான உணர்வுகளோடு செய்து, தன் இழப்பின் வலியை படம் பார்ப்பவர்களுக்கு கடத்துகிறது அந்த அழகான நாய்.
நாய்க்காக வாதாடும் வழக்கறிஞராக எஸ் ஏ சந்திரசேகரன். நாய் வெளிப்படுத்தும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்போது நெகிழ வைத்து, தொழில்நுட்ப உதவியுடன் வாக்குமூலம் கொடுக்க நாயை தயார்படுத்துவது, தகுந்த சாட்சிகளை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி எதிர்தரப்பு வழக்கறிஞரை திணறடிப்பது என நகரும் காட்சிகளில் புத்திசாலித்தனம் காட்டியிருக்கிறார். அவரது உதவியாளராக வருகிற இந்திரஜா ரோபோசங்கர் குழந்தைத்தனத்துடன் தன் குருவிடம் கலந்து பழகுவதை ரசிக்க முடிகிறது.
நீதிமன்றம் இதுவரை சந்திக்காத வ்ழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கிற நீதிபதியாக வருகிற ஒய் ஜி மகேந்திரன் அனுபவ நடிப்பைத் தர,
குற்றவாளியின் வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல், குற்றவாளியின் தந்தையாக கவிதா பாரதி, திமிர்பிடித்த போலீஸ் அதிகாரியாக அருவி மதன் என இன்ன நடிகர், நடிகைகளிப்பில் நேர்த்தி தெரிகிறது.
விலங்குகள் சொல்ல வருவதை அறிவியல் உபகரணங்களின் வழியாக கண்டறிந்து எடுத்துச் சொல்கிற நிபுணராக சத்யன், பார்வையற்றவராக இருந்தாலும் நீதிமன்றத்தில் ‘ஐ’ விட்னஸாகிற ஜார்ஜ் மரியான் இருவரும் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் புதுவிதமானது; இதுவரை தமிழ் சினிமா சந்திக்காதது.
கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் களமாடிப் போகிறார் சரவண சுப்பையா.
நல்ல நோக்கத்தை முன்வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிற நிதின் வேமுபதி, நாய்க் குட்டியைக் கொன்றுவிட்டு அதற்கான வழக்கு விசாரணையை திமிருடன் எதிர்கொள்கிற பாத்திரத்தில் கவனம் பெறுகிறார்.
சித்தார்த் விபினின் பின்னணி இசை ஆரம்பத்தில் இரைச்சலாக வெளிப்பட்டு, போகப்போக கதையோட்டத்தின் தன்மைக்கு நெருக்கமாகி விடுகிறது. ‘காலங்கள் தானாய் மாறும்’ பாடல் இதம்.
எளிமையான ஒளிப்பதிவால், சலிப்பு தட்டாதபடி படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கும் எடிட்டிங்கால் படம் தரம் உயர்ந்திருக்கிறது.
ரசிகர்களுக்கு ஒரு செய்தி ‘இது வழக்கமான படமல்ல.’
அதே ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்… படத்தில் நடக்கும் சம்பவங்களை ‘இதெல்லாம் சாத்தியமா?’ என்ற கோணத்தில் அணுகாமல், மனிதனாக இருந்தாலும் மிருகங்களாக இருந்தாலும் உயிரும் உணர்வும் ஒன்றுதான் என்ற கோணத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.
கூரன் _ மேலோட்டமாக பார்த்தால் ராமநாராயணன் படம். கருத்தை உள்வாங்கிக் கொண்டால் உயிரோட்டமான பாடம்!
-சு.கணேஷ்குமார்

