Home விமர்சனம் ஓஹோ எந்தன் பேபி சினிமா விமர்சனம்

ஓஹோ எந்தன் பேபி சினிமா விமர்சனம்

சினிமாவுக்குள் சினிமாவாக விரிகிற, இளமைத் துடிப்போடு சுற்றித்திரியும் கதாபாத்திரங்களின் பங்களிப்போடு ‘ஓஹோ எந்தன் பேபி.’

கதைப்படி விஷ்ணு விஷால் திரைப்பட கதாநாயகன். திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கிற ருத்ரா அவரை சந்தித்து கதை சொல்கிறார். முதலில் சொல்லும் கதை விஷ்ணுவுக்கு திருப்தி தரவில்லை. ‘காதல் கதை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்கிறார். ருத்ரா தன்னுடைய சொந்த காதல் கதையை, பிரேக் ஆன தருணம் வரை சொல்கிறார்.

கதையைக் கேட்டுக்கொண்ட விஷ்ணு, பிரிந்துபோன ‘உன் காதலியை தேடிக் கண்டுபிடித்து பிரிவுக்கு பிறகு நடந்தவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு கதையை முடி. நான் நடிக்கிறேன்; நீ இயக்கலாம்’ என்பது போல் சொல்கிறார்.

ருத்ரா பிரிந்த காதலியை தேடிப் பயணப்பட அதன் பின் நடப்பதில் திருப்பங்களும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன… இயக்கம் கிருஷ்ணகுமார் ராமகுமார்

கதையின் நாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் (பெரியப்பாவின் மகன்) தம்பி ருத்ரா. அவர் சொல்லும் கதையில் அவரே ஹீரோவாக நடிப்பதுபோல் கடந்தோடுகிற காட்சிகளில் பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வாலிபப் பருவம் என வயதுக்கேற்ற தோற்ற மாறுபாட்டுடன் வருபவர், நடிப்பில் காதல் உணர்வில் மிதக்கும்போது பரவடம், காதல் தோல்வியில் பரிதாபம், ஆத்திரம் கொப்பளிக்கும்போது ஆவேசம் என காட்சிகளுக்கு எது தேவையே அதை மினிமம் லெவலில் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

ருத்ராவின் காதலியாக மிதிலா பால்கர். கதையின் தேவைக்கேற்ப உற்சாக முகமும் காட்டுகிறார்; முகத்தை உர்ரென்றும் வைத்துக் கொள்கிறார். காதலன் கோபத்தின் உச்சத்துக்குப் போய் தன்னை வெறித்தனமாக திட்டும்போது பயந்து நடுங்கும் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஷ்ணு விஷால் கதை கேட்கும்போது உடனிருந்து கதையின் போக்கு பற்றி கருத்து சொல்கிற வேலை ரெடின் கிங்ஸ்லிக்கு. அதை தன் வழக்கமான மேனரிஸத்தோடும், வழக்கமான டயலாக் டெலிவரியோடும் செய்திருக்கிறார்.

இயக்குநர் மிஸ்கின் இயக்குநர் மிஸ்கினாகவே வருகிறார். கொஞ்சமே கொஞ்சம் கலகலப்புக்கு உதவியிருக்கிறார்.

கருணாகரன், கஸ்தூரி, கீதா கைலாசம் என இன்னபிறரின் நடிப்பு நேர்த்தி.

ஜென் மார்டின் இசையமைத்திருக்கும் பாடல்களில் எனர்ஜி எக்கச்சக்கம். பின்னணி இசையில் குறையில்லை. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனையும் கலர்ஃபுல்.

ஒரு காதல், அதற்குள் மோதல், இடையிடையே நடக்கும் சம்பவங்களில் ரசிக்கவைக்கும் சுவாரஸ்யங்கள் என பின்னிப் பிணைந்த இந்த ஓஹோ எந்தன் பேபி’ நொடிக்கு 100 முறை ‘ஐ லவ் யூ பேபி’ என்று சொல்லி செல்லங்கொஞ்சும் இன்றைய காதல் ஜோடிகளுக்கு புத்துணர்ச்சி அனுபவம் தரும்.

சு.க.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்