காதல், மனிதர்களை பைத்தியமாக்கும்; பைத்தியக்காரத்தனமாக செயல்பட வைக்கும். இரண்டுமே கலந்துகட்டி கட்டியிருக்கிற கதை இது.
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளப் போகிற அந்த இளைஞனுக்கு ஃபேஸ்புக் மெஸன்ஜரில் சில மெசேஜ்கள் வருகிறது; அது அவன் மனதுக்கு ஆறுதல் தருகிறது. அதனால் தற்கொலை முடிவை கைவிடுகிறான்.
மெஸேஜ் அனுப்பியது ஆனந்தி என்கிற பெண். அவள் யாரென விசாரித்தால் அவள் இரண்டு மாதங்கள் முன்பே இறந்துவிட்ட தகவல் கிடைக்கிறது. இறந்துபோனவள் மெசேஜ் அனுப்ப வாய்ப்பில்லை. அவளது அக்கவுண்டிலிருந்து வேறு யாரோ மெஸேஜ் அனுப்பியிருக்கலாம் என நினைத்து கதையைக் கவனித்தால் அப்படியெல்லாம் இல்லை என்கின்றன அடுத்தடுத்த காட்சிகள். அப்படியெனில் உண்மையில் என்ன நடக்கிறது? இயக்குநர் ரமேஷ் இளங்காமணியின் சுவாரஸ்யம் நிரம்பிய திரைக்கதையில் பதில் இருக்கிறது…
காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்வது, மெஸன்ஜரில் அறிமுகமான பெண் தன்னை உயிருக்குயிராக காதலித்ததை அறிந்து அவள் இறப்புக்கு பின் அவளைக் காதலிப்பது, அவளையே கல்யாணம் செய்துகொண்டு வாழ்வது என ஹீரோவின் நடவடிக்கைகள் அத்தனையும் அதிரிபுதிரி அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்க, இயல்பாக அமைந்திருக்கும் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கலகலப்பூட்டுகிறார் ஸ்ரீராம் கார்த்திக்.
அவரை ஒருதலையாக காதலித்து, விபத்தில் காலமாகிற ஆனந்தியாக பாத்திமா. வெடவெட தேகத்துடன் இருக்கும் அவரது வெகுளித்தனமான நடிப்பு கவர்கிறது.
பாத்திமாவுக்கு சினேகிதியாக வருகிற வைஷாலி ரவிச்சந்திரனின் அழகும் இளமையும் துடிப்பான நடிப்பும் பரவசமூட்டுகிறது; அவர், ‘ஆனந்திக்கு பதிலா என்னை யூஸ் பண்ணிக்கோங்க’ என்பது போல் ஹீரோவுடன் படுக்கையில் சாய்வதெல்லாம் ஒரு பக்கம் கிளுகிளுப்பையும் இன்னொரு பக்கம் அப்படியொரு காட்சியை வைத்த இயக்குநர் மீது வெறுப்பையும் உருவாக்குகிறது.
ஹீரோவின் அம்மாவாக வருகிற பிரியதர்ஷினி மகனுடைய எல்லாவித ஏடாகூட நடவடிக்கைக்கும் துணைபோவது படத்தில் காமெடி இல்லாத குறையை ஓரளவு குறைக்கிறது; அவர் பேசும் சில வசனங்கள் முகஞ்சுளிக்க வைக்கிறது.
ஹீரோவின் முன்னாள் காதலியாக மனிஷா ஶ்ரீ, பாத்திமாவின் தந்தையாக ஜீவா ரவி, இன்ஸ்பெக்டராக லிவிங்ஸ்டன் என மற்றவர்கள் கதையோட்டதுக்கேற்ப நடித்திருக்க, பாடல்களை இதம் தருவதாகவும் பின்னணி இசையை காட்சிகளுக்கு பலம் சேர்ப்பது போலவும் அமைத்திருக்கிறார் அபுபக்கர்.
ஆர் பாலகணேசனின் ஒளிப்பதிவில் குறையில்லை.
இறந்தவருடன் ஒருவர் வாழ்வதே புதுமையாக இருக்க, அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல் எட்டிப் பார்க்கிற கிளைமாக்ஸ் ‘அட’ போட வைக்கிறது.
தாங்கள் ‘யார் நடித்தாலும் பரவாயில்லை, மேக்கிங் எப்படியிருந்தாலும் ஓகேதான்; கதை வித்தியாசமாக இருந்தால் போதும்’ என்ற மனநிலை கொண்டவர்களாக இருந்தால் மெஸன்ஜர் தருகிற அனுபவம் போதுமானதாக இருக்கும்!
-சு.கணேஷ்குமார்

