சீரியல் கில்லர் கதைகளை விதவிதமாக பார்த்திருக்கிறோம். அதில் ஆர்யனின் அட்டெம்ப்ட் நிச்சயமாய், சத்தியமாய் புதுசு.
நடுத்தர வயதுக்காரர் அழகர், தொலைக்காட்சியொன்றின் நேரலை நிகழ்ச்சியில் நுழைந்து, தான் தினம் ஒருவராக ஐந்து பேரை கொல்லப்போவதாக சொல்லி, ‘முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்’ என சவால் விடுகிறார். அவர் யாரையெல்லாம் கொல்லத் தீர்மானித்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, கொலைகளைக் தடுக்கும் பணியை நம்பி என்பவரிடம் நம்பிக் கொடுக்கிறது காவல்துறை.
அவர் எதையெல்லாம் கண்டுபிடிக்கிறார் என்பது பரபரப்பாக இருக்க, கொலைகளைத் தடுக்க அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அத்தனையும் விறுவிறுப்பு. கொலைகளுக்கான காரணத்தை விடுவிக்கும் கிளைமாக்ஸ் தூக்கிவாரிப் போடுகிறது… இயக்கம் ‘மேனகா 0 2’ பிரவீன் கே
நம்பியாக விஷ்ணு விஷால்; காவல்துறை அதிகாரிக்கான கம்பீரத்தை தோற்றத்தில் காட்டுபவர், கொலையாளியின் பின்னணியை கண்டறிவது, கொலைகளை தடுப்பதில் தீவிரமாவது என சுறுசுறு சூறாவளியாய் சுழன்றிருக்கிறார்.
நான்தான் கொலை செய்யப் போகிறேன்; இவர்களைத்தான் கொலை செய்யப் போகிறேன் என சொல்லிவிட்டு சொன்னதைச் செய்யத் தயாராகிற அழகராக செல்வராகவன் காட்டியிருக்கும் தெனாவட்டு நிரம்பிய உடல்மொழி கவர்கிறது.
காட்சிகள் குறைவென்றாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளராக ஷ்ரதா ஸ்ரீநாத் வெளிப்படுத்தியிருக்கும் ஆளுமை நிறைவு.
விஷ்ணு விஷாலின் மனைவியாக மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என இன்னபிறரின் பங்களிப்பு கச்சிதம்.
தீப்பிடித்த வேகத்தில் கடந்தோடும் திரைக்கதைக்கு பொருத்தமான பின்னணி இசையைத் தந்து பய உணர்வைத் தூண்டுகிறார் ஜிப்ரான் வைபோதா.
உணர்ச்சிக் கொந்தளிப்போடும் திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாமலும் நகரும் காட்சிகளின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு.
ஸ்டண்ட் கோரியோகிராபர்கள் ஸ்டண்ட் ஷில்வா, பி.சி ஸ்டண்ட் பிரபு இருவர் வடிவமைத்திருக்கும் அதிரடியான ஆக்சன் காட்சிகளும், ஷான் லோகேஷின் படத்தொகுப்பும் படத்தின் பலம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கம், சுரங்கப்பாதை, அதற்குள் சிலபல சமாச்சாரங்கள் என கலை இயக்குநரின் உழைப்பை காண்பிக்கும் அம்சங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.
இந்த உலகம் பெரும்பாலும் திறமையாளர்களை அங்கீகரிப்பதில்லை; மக்களுக்காக சேவை செய்பவர்களை மதிப்பதில்லை. கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடுவதில்லை. அதையெல்லாம் நினைத்து நினைத்து மனம் நொந்துபோன ஒருவர், அப்படிப்பட்ட சிலரை இந்த ஊர் உலகத்துக்கு அடையாளம் காட்ட நினைப்பதும் அதற்காக அவர் எடுத்துக் ‘கொல்லும்’ முயற்சிகளுமாக மிரட்டிய ‘மேனகா O 2’ மலையாள வெப் சீரிஸை நினைவுபடுத்தும் விதமாக, சீட்டின் நுனியில் ரசிகர்களை கட்டிப்போடும் இந்த சைக்கோ திரில்லர் தமிழ் சினிமாவின் மற்றொரு ‘ராட்சசன்.’
-சு.கணேஷ்குமார்


