டார்க் காமெடி ட்ரீட்டா உருவாகியிருக்கிற ‘ரிவால்வர் ரீட்டா.’
தாத்தா வயதிலிருக்கிற தாதா டிராகுலா பாண்டியன் குஜாலாக இருக்க ‘அந்த’ மாதிரிப் பெண்ணைத் தேடிப்போகும்போது, வழி மாறி ரீட்டாவின் வீட்டுக்குள் நுழைகிறார்; காமப் பார்வை வீசுகிறார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை; வெறியேறி பாயவும் தயாராகிறார். அந்த நேரமாகப் பார்த்து என்ட்ரீ கொடுக்கும் ரீட்டாவின் தாயார் மகளைக் காப்பாற்றத் தயாராகிறார். தற்காப்புக்காக தன் கையிலிருந்த குக்கரை தாதா மீது வீசுகிறார். காமவெறி பாண்டியன் காலமான பாண்டியனாகிறார்.
அந்த கொலைப் பழியிலிருந்து தப்பிக்க ரீட்டாவும் அவரது அம்மாவும் அக்கா தங்கைகளும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஏகப்பட்ட பேர் கொல்லப்படுகிறார்கள். நடப்பதெல்லாம் வன்முறைதான்; துப்பாக்கிச் சூடுதான்; ரத்தம் தெறிக்கும் சம்பவங்கள்தான். அதையெல்லாம் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் (‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த) இயக்குநர் ஜே.கே. சந்துரு.
ரீட்டாவாக கீர்த்தி சுரேஷ். டிராகுலா உயிரை விட்டபோது பயத்தில் மிரள்பவர், உடலை அப்புறப்படுத்த ஸ்கெட்ச் போட ஆரம்பிப்பதில் இருந்து பயத்தை தூக்கிப்போட்டுவிட்டு எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’ என்ற முடிவுக்கு தன் மனது வந்துவிட்டதை கண்களின் வழி உணர்த்தியபடி களமாடுவதை ரசிக்க முடிகிறது. தங்களைக் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அம்மணி எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் புத்திசாலித்தனம்; அத்தனையும் காமெடி களேபரம். அடிக்கடி எட்டிப்பார்க்கிறது எதிர்பாராத டிவிஸ்ட்.
மகள் கோடு போட்டால் அம்மாவாக வருகிற ராதிகாவுக்கு ரோடு போடுகிற வேலை. என்ட்ரியிலிருந்து என்ட் வரை மேடம் அடித்திருக்கும் லூட்டி எக்கச்சக்கம். ஒரு காட்சியில் ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று சத்தமாக குரல் கொடுக்கிறார்; சிரிப்புச் சத்தத்தில் தியேட்டர் மூழ்குகிறது.
டிராகுலாவின் மகனாக சுனில்; வருகிற காட்சிகளில் பின்னணி இசையால் அவருக்கு தரப்படும் பில்டப் தாறுமாறு. நடிப்பெல்லாம் ரெகுலரு.
ஜான் விஜயை அயோக்கிய போலீஸாக பல படங்களில் பார்த்துவிட்டோம்; மீண்டும் அப்படியே பார்க்கிறோம் என்பதை தவிர ஸ்பெஷலாக ஏதுமில்லை.
அஜய் கோஷ் டிராகுலாவின் தலையை வெட்டித் தருகிறவர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாயை தூக்கிக்கொண்டு காரில் அங்கும் இங்குமாய் சுற்றிக் கொண்டிருப்பதை ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கீர்த்திக்கு அக்காவாக வருகிறவரின் பெரிய கண்களும் பால்கோவா உடம்பும் ஆண்களுக்கு போதை தரலாம். சென்ட்ராயன், அகஸ்டின் என ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கடமையை செய்திருக்கிறார்கள்.
காமெடி சப்ஜெக்ட் என்றாலும் கேங்ஸ்டர்களின் நடமாட்டம் ஜாஸ்தி. அதற்கேற்றபடி அமைந்திருக்கிறது ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும்.
சில காட்சிகள் ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்யா’ என்று சொல்லவைத்தாலும் ரிவால்வரிலிருந்து சீறிப் பாய்வதில் எக்கச்சக்க சிரிப்பு புல்லட்கள் இருப்பதால் வெடித்துச் சிரிக்க முடிகிறது.
ரிவால்வர் ரீட்டா _ காமெடி தோட்டா!
-சு.கணேஷ்குமார்
