டார்க் காமெடி சப்ஜெக்டில், ஃபன் சிட்டி என்று சொல்லும்படியான திரைக்கதையில் ‘கான் சிட்டி.’
டைட்டிலை ‘தில்லுமுல்லு தில்லாலங்கடிகள்’ என்று வைத்திருக்கலாம். அந்தளவுக்க்கு பிரதான கேரக்டர்கள் மோசடியில் ஈடுபடுகிற கதை.
ஒவ்வொருவரும் செய்கிற பிராடுத்தனங்கள் சுவாரஸ்யமாக இருக்க, அவர்கள் அப்படி செயல்படுவதற்கு காரணம் என்ன, என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள் என்பதெல்லாம்தான் கான் சிட்டியின் சிரிப்பு மசாலா தூக்கலாக தூவிய திரைக்கதை.
மக்கள் செலுத்தும் மின் கட்டணத்தை ஏமாற்றிச் சுருட்டி முறைகேடான வழியில் பல மடங்காக பெருக்குகிற வேலை அர்ஜுன்தாஸுக்கு. டிரஸ்ட் நடத்துவதாக சொல்லி லட்ச லட்சமாக உதவித்தொகை, நன்கொடை வாங்கிக் குவிக்கிற வேலை வடிவுக்கரசிக்கு. வடிவுக்கரசியின் மகனாக யோகிபாபு. அவருக்கு, அம்மாவின் திருட்டுத்தனத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் போட்டுக் கொடுக்கும் திட்டத்துக்கு ஒத்துழைக்கிற வேலை. வீடுகளை லீஸுக்கு விடுகிற ஏஜென்டாக இயங்கி லட்சக்கணக்கில் ஆட்டைய போடுகிற வேலை அன்னாபென்னுக்கு.
எல்லோரும் ஒரு கட்டத்தில் குடும்பமாக இணைகிறார்கள். எப்படி எப்படியோ ஸ்கெட்ச் போட்டு குவித்த பணத்தையெல்லாம் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்குகிறார்கள். புத்திச்சாலித்தனமாக தப்பிக்கிறார்கள்.
அர்ஜுன்தாஸின் நடிப்பில் எல்லாவிதமான உணர்வுகளும் வெளிப்படுகிறது. யோகிபாபு அம்மாவின் குருட்டுத் துணிச்சலைப் பார்த்து மிரள்வதும், அம்மாவான வடிவுக்கரசி விடு பார்த்துக்கலாம் என்பது போல் கெத்து காட்டுவதும் ரசிக்க வைக்கிறது. அன்னா பென்னும் கலகலப்புக்கு உதவுகிறார்.
சாக்ஷி வைத்யா நெகுநெகு உயரமும் பளபள தேகமுமாக வருகிறார். அர்ஜுன்தாஸை காதலித்து, அவர் என்னவெல்லாம் குற்றம் செய்கிறார் என்பது தெரிந்து வெறுக்கிறார். நடிப்பு போதுமான அளவில் இருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக நந்தகோபால் வில்லத்தனமும் காட்டுகிறார்; வெகுளியாய் இருந்து ஏமாறவும் செய்கிறார். கவனிக்கத்தக்க பாத்திரங்களில் பொன்வண்ணன், விடிவி கணேஷ், அருள்தாஸ் இன்னபிற சிறிய கேரக்டர்களில் ராதாரவி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, ரகு எசக்கி என கச்சிதமாக பங்களித்திருக்கும் நடிகர்களின் பட்டியல் நீளம்.
மோசடிக் கூட்டணி உறுப்பினராக வருகிற சிறுவன் அகிலனின் நடிப்பும் கவனம் பெறுகிறது.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் அருள் மோசஸ் ஏ.வின் படத்தொகுப்பும் கதையின் போக்கிற்கு ஊட்டமளித்திருக்கின்றன.
டார்க் காமெடி ஜானரை கையிலெடுத்திருக்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் திரைக்கதையை திரில்லருக்கான வேகத்தில் உருவாக்கியிருப்பதும், கலகலவென ரசித்துச் சிரிக்க உத்தரவாதம் தருகிற காட்சிகளை அமைத்திருப்பதும் கான் சிட்டியை மீண்டும் மீண்டும் காண்பதற்கு தூண்டுகிறது.
-சு.கணேஷ்குமார்
