போதையின் பாதை எத்தனை ஆபத்தானது என்பதை எடுத்துக்காட்டும் படைப்பாக ‘முதற்கனல்.’
ஐந்து மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள், 18 வயதுக்குள் ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகிறார்கள். போதைக்கு அடிமையானதாலேயே அவர்கள் அப்படியொரு குற்றத்தைச் செய்தது உறுதியாகிறது.
இப்படி பரபரப்பான பின் பகுதியைக் கொண்ட கதையின் முன்பகுதி போதைப் பழக்கம் எப்படி துவங்கியது, அதனால் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், இழப்புகள் என சிலவற்றை சமூகம் விழிப்புணர்வு பெறும்படி விவரிக்கிறது. குற்றவாளிகளாய் நிறுத்தப்பட்ட அவர்களுக்கு நீதிமன்றம் தருகிற தண்டனை தனித்துவம்.
மாணவர்கள் ஐந்து பேரில் முதன்மையானவராக அஸ்வின். நன்றாகப் படிக்கும் மாணவனாக இருந்து சிகரெட் பிடிக்கும் சக நண்பர்களையும் சிகரெட் வாசனையையும் வெறுப்பது, நண்பர்கள் கட்டாயப்படுத்தி சிகரெட் பிடிக்க வைக்கும்போது மூச்சுத் திணறுவது, சிகரெட்டில் கஞ்சாவை நிரப்பி பிடிக்கச் சொல்லும்போது மறுப்பது, நாட்கள் போகப்போக போதைக்குப் அடிமையாகி வீட்டிலும் பள்ளியிலும் தாறுமாறாக நடந்து கொள்வது, படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போய் மதிப்பெண் குறைவது, போதைக்காக பணத்தை திருடுவது, வீட்டை விட்டு வெளியேறி உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடுவது, உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்பட்ட நிலையில் குப்பையோடு குப்பையாக தெருவோரம் விழுந்து கிடப்பது, நீதிமன்றத்தில் தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்க தயாராவது என கனமான காட்சிகளுக்கு போதுமான அளவில் எளிமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
படிப்பு ஏறவில்லை என்று சொல்லிக் கொண்டு போதைப் பழக்கத்துக்கு தான் ஆளானததோடு எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத அஸ்வினை போதைக்கு பழக்கப்படுத்தி அடிமைக்கும் மாணவன் பாண்டியாக ராஜேஷ். போதைப் பழக்கத்தின் சுகத்துக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும்போது உற்சாகத்தையும் அதனால் படிப்பையும் ஒரு கையையும் இழந்து கொலைக் குற்றவாளியாகி நிற்கும்போது குற்ற உணர்வையும் வலியையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார்.
உற்பத்தியைத் தடுக்காமல், விற்பனையைத் தடுக்காமல், பயனாளிகளை மட்டும் குற்றவாளிகளாக பார்க்கும் நமது சட்டதிட்ட நடைமுறைகளை முன்வைத்து வாதாடி கவனம் ஈர்க்கிறார் (இந்த படத்தின் இயக்குநர்) வெங்கடரமணன்.
அஸ்வினுக்கு அப்பாவாக வருகிறவர் நன்றாகப் படிக்கும் மகன் தன் கண்ணெதிரிலேயே சீரழிவதைப் பார்த்து கலங்கி நிற்பவராக கவனிக்கத்தக்க நடிப்பைக் கொடுத்திருக்க, அம்மாவாக, தங்கையாக, சக நண்பர்களாக என இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருப்போரின் நடிப்பு கச்சிதம்.
மீரா லால் இசையில் ‘கலகல ஆட்டம் நாங்க காக்கா கூட்டம்’ பாடல் புத்துணர்ச்சியைத் தூண்ட, ‘ஒரு தவறு செய்தால்’ உள்ளிட்ட படம் வலியுறுத்தும் கருத்துக்கள் அடங்கிய பாடல்கள் இதமூட்டுகின்றன. பின்னணி இசையும் கந்தசாமி கோபாலின் ஒளிப்பதிவும் நேர்த்தி.
சில வருடங்கள் முன் மதுப்பழக்கத்தின் தீமைகளை எடுத்துச் சொல்லி ‘அப்பா வேணாம்பா’ என்ற திரைப்படத்தை இயக்கிய வெங்கடரமணன் இந்த படத்தில் சிகரெட்டில் துவங்கி கஞ்சா, அபின், ஹெராயின் என பலவிதமான போதைப் பொருட்களின் புழக்கம், பலியாகும் இளைய தலைமுறை, நடக்கும் குற்றச் செயல்கள் என பட்டியலிட்டு, அனைத்தையும் தடுக்க வலியுறுத்தியிருக்கிறார். சட்டம் கடமையைச் செய்கிறதோ இல்லையோ, இந்த படம் போதைக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைக்கும் ஒரு சிலரையாவது திருத்தும் என்பது உறுதி.
முதற்கனல் – முன்னுதாரணம்!
-சு.கணேஷ்குமார்

