மேஜிக்கல் ஃபேண்டஸி சப்ஜெக்டில் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்.’
சூரி ஆம்புலன்ஸ் டிரைவர். பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்பவர். ஒரு கட்டத்தில் மூன்று நாட்களில் 25 லட்சம் தேவைப்பட, தன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிற திவ்யா என்கிற சிறுமியைச் சந்திக்கிறார். அவளிடம் இருக்கும் விசேஷ சக்தியை வைத்து தன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். நினைத்ததை செயல்படுத்தும்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் சுவாரஸ்யமாகவும், மனதைக் கலங்கடிப்பதாகவும் இருக்கிறது.
25 லட்சத்துக்கான அவசியம் என்ன? திவ்யா யார்? அவளுக்கு விஷேச சக்தி வந்தது எப்படி? என்பதையெல்லாம் போகிற போக்கில் தெரிந்துகொள்ள முடிகிறது. இயக்கம் சஷாங்க் யெலெட்டி
சூரியாக ஃபகத் ஃபாசில். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும் மார்க்கெட் பகுதியை அதிரிபுதிரியாக ஆம்புலன்ஸில் கடந்து போகும் ஆரம்பக் காட்சியில் துவங்கி பல காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். திவ்யாவுக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பும், சிறுமியின் பெற்றோரின் உயிரைக் காப்பாற்ற போராடும் தருணமும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.
திவ்யாவாக ஷாரா பலேக்கர். பெற்றோரை தன் சக்தியால் தொலைத்து விட்டதாக கருதி பெற்றோரை தேடிக் கொண்டிருப்பதாகட்டும், ஃபகத் ஃபாசிலுடன் நட்பு ஏற்பட்ட பின் பிரியம் காட்டுவதாகட்டும், அவரை அடித்து துவைத்து துன்புறுத்துபவர்களை தன் சக்தியால் துவம்சம் செய்வதாகட்டும் ஃபெர்பாமென்ஸ் அத்தனையும் சிக்ஸர்.
ஃபகத் ஃபாசிலிடம் 25 லட்சம் கேட்டு டார்ச்சர் செய்கிற கடத்தல் பிசினஸ் தாதாவாக மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஃபகத் ஃபாசிலின் நண்பனாக வெங்கடேஷ் காகமனு என இன்னபிறரின் நடிப்பு கச்சிதம்.
சீன்களின் சீரியஸ்னெஸ் புரிந்தும் சிரிப்பூட்டும் தருணங்களுக்கு ஏற்றபடியும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் கால பைரவா. காட்சிகளின் தரம் உயர ஒத்துழைத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸின் கேமரா.
இயக்குநர் சஷாங்க் யெலெட்டி கதையில் கலந்திருக்கும் ஃபேண்டஸி அம்சங்கள் உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிகளுக்குப் பிடிக்கும்; கதையில் கலந்திருக்கும் எமோஷ்னல் எபிசோடுகள் உங்களுக்குப் பிடிக்கும்.
-சு.கணேஷ்குமார்

