கன்டெய்னரில் கட்டுக்கட்டாக குவிந்திருக்கும் பணத்தை கிளைமாக்ஸில் காட்டுகிற கமர்ஷியல் என்டர்டெய்னர். ஹெய்ஸ்ட் திரில்லர் சப்ஜெக்டில் ‘சிக்மா.’
ஹீரோ குரு கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார். கையிலிருக்கும் சில லட்சங்களை பல மடங்காக பெருக்கலாம் என்ற எண்ணத்தில் சூதாட்டத்தில் கலந்து கொள்கிறார். சூதாட்டமே சட்டவிரோதம். அதிலும் மோசடி நடக்க, கிளப் உரிமையாளருடன் மோதுகிறார். அதன் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடத்தல் அதுஇதுவென பெரிய குற்றங்களில் ஈடுபடுகிற டான் ஒருவரின் ரகசிய லாக்கரில் பதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் பற்றி தெரிய வருகிறது. ஹீரோ அதை தட்டித் தூக்க திட்டமிடுகிறார்.
அந்த திட்டம் என்ன, அதை எப்படி எக்ஸிகியூட் செய்கிறார் என்பது மீதிக்கதை…
குருவாக சந்தீப் கிஷன். கடனால் பாரம்பரிய சொத்தை இழக்க வேண்டிய சூழ்நிலையில் மன உளைச்சல், கோடிக்கணக்கான பணத்தை அடையும் முயற்சிகளில் சவால்களைச் சமாளித்தல், தன் நடவடிக்கைகளால் காதலியின் பணத்தை இழந்து குற்றவுணர்ச்சியில் தவித்தல் என நடிப்பில் வெரைட்டி காட்ட எக்கச்சக்க வாய்ப்பு. எல்லாவற்றையும் கடமைக்காக செய்தது போலிருக்கிறது நடிப்பு.
ஹீரோ என ஒருவர் இருந்தால் அவரைக் காதலிக்க, அவருடை கஷ்ட நஷ்டங்களில் உடனிருக்க ஒரு ஹீரோயின் தேவை. அந்த தேவையை நிறைவேற்ற சிரித்தால் அழகு கூடுகிற நெகுநெகு உயர ஃபரியா அப்துல்லா பயன்பட்டிருக்கிறார். நடிப்புப் பங்களிப்பில் பார்டரில் பாஸாகிறார்.
500 கோடிக்கு அதிபதி, 1000 கோடிக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் சம்பத்ராஜுக்கு பில்டப்பெல்லாம் பெரிதாக இருக்கிறது. அவர் என்னவோ லோக்கல் ரவுடி ரேஞ்சில் எதிரிகளுடன் அடிதடி, வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு என பரபரப்பாக திரிகிறார். நடிப்பில் தெரிவது பழக்கப்பட்ட வில்லத்தனம்.
ராஜு சுந்தரம் பெரிய டாக்டர். அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி போல் அப்படியும் இப்படியும் தலை காட்டுகிறார்.
கேத்ரின் தெரசாவுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுகிற வேலை. ஆட்டம் கிறக்கமாகத்தான் இருக்கிறது. பாடலில் வரும் ‘பெண்களை போகப்பொருளாக பார்க்காதே’ என்கிற கருத்தான வரிகள் ‘என்ன கொடுமை சரவணன் இது?’ என்பதுபோல் ஃபீலிங்கை உருவாக்குகிறது.
தன்னால் எந்தளவு முடியுமோ அந்தளவு பின்னணி இசையால் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கும் தமன், பாடல்களுக்கான இசையில் புத்துணர்ச்சி தருகிறார்.
ஹீரோ நடத்தும் லைப்ரரி, சூதாட்ட கிளப், ரகசிய லாக்கர் வைக்கப்பட்டிருக்கும் ஏரியா என கதை நிகழ்விடங்களை கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது ரிச்சாக தெரிகிறது.
திரைக்கதையில் வேகமிருப்பதாக தோன்றுவதற்கு பிரவீன் கே.எல்லின் எடிட்டிங்கிற்கு பெரும் பங்குண்டு.
ஸ்டைலிஷ் மேக்கிங்கில் பிரமாண்டமாக ஒரு படம் இயக்க வேண்டும் என்ற அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் ஆசை லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் நிறைவேறியிருக்கிறது. கதையில் புதுமையில்லாவிட்டாலும் லிஃப்ட் கார் பார்க்கிங் சண்டைக் காட்சி உள்ளிட்ட அட்ராக்டிவான சில விஷயங்கள் கவனம் பெறுகின்றன.
மட்டன் பிரியாணி எதிர்பார்ப்புடன் போகிறவர்களுக்கு வெஜ் புலாவ் கிடைத்தால்கூட ஓகேதான். உப்புமாவை நீட்டினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கும் ‘சிக்மா’ தருகிற அனுபவம்.
-சு.கணேஷ்குமார்

