சிவாஜி காலத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மாதிரியோ, அர்ஜுன் காலத்து ‘ஜெய்ஹிந்த்’ போலவோ இல்லாமல் முழுவதும் வித்தியாசமான சிந்தனையில் உருவான தேசப்பற்றுத் திரைப்படம்.
அந்த முதியவருக்கு டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ஏற்றும் தேசியக் கொடியை, அது பறப்பதைப் பார்க்க வேண்டுமென்பது ஆசை, கனவு. அவர் தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் வேலை பார்ப்பவர்; அவர் தயாரித்த கொடியைத்தான் குடியரசுத் தலைவர் ஏற்றப் போகிறார் என்பது அண்டர்லைன் போட்டு எழுத வேண்டிய இம்பார்ட்டன்ட் மேட்டர். அப்படியிருக்க, அவர் ஆசைப்படுவதிலோ, கனவு காண்பதிலோ எந்த தவறுமில்லை. ஆனால், டெல்லிக்கு செல்ல திட்டமிடுகையில் அவருக்கு உடல் நலமில்லாது போகவே, அவர் பார்க்க நினைத்ததை தான் பார்ப்பதற்காக அவரது பேரன் டெல்லி நோக்கிப் புறப்படுகிறான்.
பேரன் என்றால் இளைஞனோ நடுத்தர வயதுக்காரரோ இல்லை; ஏழெட்டு வயது நிரம்பிய சிறுவன். அவன் யாருடைய துணையுமில்லாமல், பயணச் செலவுக்கு சரியான பணமும் இல்லாமல், மனம் போன போக்கில் கிளம்பிவிட, 40 நாட்களில் இந்தியா முழுவதையும் சுற்றி விடுகிறான். அது மட்டுமல்ல, தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைதாகி பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட விசாரணைக்கும் ஆளாகிறான்.
தீவிரவாதத்திற்கும் சிறுவனுக்கும் என்ன தொடர்பு? அவனால் டெல்லியில் தேசியக் கொடி பறப்பதை பார்க்க முடிந்ததா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் மீதிக் கதை…
சிறுவனாக, கதையின் நாயகனாக திஹான். பெற்றோரை இழந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் தவிப்பது, ஆர்வக் கோளாறில் ரயிலில் பயணிக்கத் துவங்கி மாநிலம் மாநிலமாக போவது, மொழி தெரியாமல் தவிப்பது, வழியில் கிடைத்த தோழியுடன் சகோதரப் பாசத்துடன் நாட்களை கடத்துவது, ராணுவ உயரதிகாரிகள் விசாரிக்கும்போது உள்ளதை உள்ளபடி சொல்வது என ந்த வயதுக்கேயுரிய குழந்தைத்தனம் நிரம்பிய இயல்பான நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
திஹானின் தாத்தாவாக சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகிற மிக்கி மக்கி ஜா, தேசப் பற்று, பேரன் மீது பிரியம் இரண்டையும் எளிமையான நடிப்பில் பரிமாறியிருக்கிறார். கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, ஷினி, பாய்ஸ் ராஜன் உள்ளிட்டோரின் பங்களிப்பு நிறைவு.
கதையின் நகர்வு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்தியாவின் பல பகுதிகளை அந்தந்த மாநில மக்களின் கலை கலாச்சாரப் பின்னணியோடு சுற்றிக் காட்டும் விதத்தில் அமைந்திருக்க அழகழகான கோணங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் படத்தை இயக்கியிருக்கிற எஸ்.பி. பொன்சங்கர்.
ராஜா ரவி வர்மா -பாலசுப்பிரமணியம் கூட்டணியின் இரைச்சலற்ற பின்னணி இசை படத்தின் ஆன்மாவாகியிருக்கிறது.
படம் எந்த விதத்தில் தேசப்பற்றை விதைக்கிறது என்பதை மையப்டுத்தி பட்டிமன்றம் நடத்தலாம். அந்தளவுக்கு நுட்பமான விஷயங்களைப் புகுத்தியிருக்கும் இயக்குநர் பொன்சங்கர் தீவிரவாதம் எந்தளவுக்கு கொடூரமானது என்பதை பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது!
-சு.கணேஷ்குமார்

