சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்துக் கொண்டிருக்கும் படம்.
இலங்கையில் நடந்த போரில் உயிரைத் தவிர எல்லாவற்றையும் இழந்த சேதுராமனும் அவரது மகள் தமிழினியும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்து சேர்கிறார்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய கட்டுப்பாடுகள். இப்படி எல்லாமே புதிதாய் இருக்க நம்பிக்கையோடு வாழ்க்கையைத் துவங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள் என விரிகின்றன அடுத்தடுத்த காட்சிகள்.
அவர்களின் மனம் எதிர்பார்க்கும் அன்பான மனிதர்கள் கிடைத்தார்களா? சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்ததா? நிம்மதியாக வாழ முடிந்ததா?
இந்த கேள்விகளுக்கான பதில்களே கதையோட்டத்தின் மீதி… இயக்கம் அபிலாஷ் ஜி. தேவன்
சேதுராமனாக மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மகள் மீதான பாசம், சொந்த மண்ணை இழந்த வலி, எதிர்காலம் குறித்த பயம் என பரிமாற வேண்டிய கனமான உணர்வுகளை கண்கள் மூலமே கடத்துகிறார். உடல்மொழியும் பொருத்தம்.
போரின் கொடூரங்களை நேரில் பார்த்த மனநிலையை, கிடைக்கிற சிறுசிறு தருணங்களில் மகிழ்ச்சியைத் தேடுகிற துடிப்பை சிறுமி நேஹா அமர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் இயல்பாக இருக்கிறது. சிறுமி குருதன்ஷிகா, சிறுவன் நிஹல் அமரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாத்திரங்களில் கவனம் பெறுகிறார்கள்.
நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன் என இன்னபிறர் எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்க,
போரின் கோர முகத்தையும், அகதிகளின் அவல நிலையையும் உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது அவுஸேப்பச்சனின் பின்னணி இசை. ‘வாடா என் செல்லக்குட்டி’, ‘தலைவாரி பூச்சூடி’, ‘நான்கு திசையிலும்’, ‘ஆகாயம் மேலே’ என அணிவகுக்கும் பாடல்கள் நேசம், ஏக்கம், உற்சாகம் என உணர்வுகளின் கலவையாக கடந்து போகின்றன.
இராமேஸ்வரத்தின் கடற்கரைப் பகுதிகளை அழகியல் பார்வையோடும், அகதி முகாம்களின் இறுக்கமான சூழல் தரும் வலியின் தன்மைக்கேற்பவும் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் பிரசாந்த் பிரணவம்.
போரின் வலிகளை குண்டு வெடிப்பு, விமான வழி தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் என காட்டுவதிலிருந்து விலகி, சென்சாரில் ‘யூ’ சர்டிஃபிகேட் பெறுகிற அளவில் வேறோரு கோணத்தில் தந்தை – மகள் உறவின் வழியாக மனிதம் பேசும் படைப்பாக்கியிருக்கிறார் அபிலாஷ் ஜி. தேவன்.
‘தாய்நிலம்’ பறிக்கப்பட்ட வேதனையின் கண்ணீர் சாட்சியான இந்த படைப்பு மனிதாபிமானமிக்க மனிதர்களுக்கானது; உலக சினிமாக்களை தேடித் தேடி பார்ப்பவர்கள் தவறவிடக் கூடாதது!
-சு.கணேஷ்குமார்



