Home விமர்சனம் இராமாயணம் சினிமா விமர்சனம்

இராமாயணம் சினிமா விமர்சனம்

வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் என ஏகப்பட்ட ராமாயணங்கள் நம்மிடையே உண்டு. ஒவ்வொன்றிலும் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லாவற்றின் மெயின் கதையும் ஒன்றுதான். ராமர்தான் ராவணனை அழிப்பார்; வித்தியாசமாக கதை சொல்கிறேன் என்று ராவணன் ராமரை போட்டுத் தள்ளினார் என உருட்ட முடியாது. அந்த வகையில் ராமாயணத்தை யார் சீரியலாக எடுத்தாலும், சினிமாவாக எடுத்தாலும் அது தெரிந்த கதையாகத்தான் இருக்கும்.

வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இது முதல் பாகம். சீதையை ராவணன் கடத்திக் கொண்டுபோனபின், ராவணனை அழித்து சீதையை மீட்க சபதம் எடுப்பதோடு நிறைவுக்கு வருகிறது.

ராமனாக ரன்வீர் கபூர். முகத்தில் தேஜஸ் கொஞ்சம் குறைவாக தெரிவது தவிர சாந்தம், பணிவு, கோபம், ஆக்ரோஷம், நிதானம் என உணர்வுகளால் நிரம்பிய நடிப்பு பங்களிப்பில் குறையில்லை.

எந்த பக்கமிருந்து பார்த்தாலும் கனிவு பொங்கும் முகமும் வசீகரப் புன்னகையுமாக சீதைக்கு உயிரூட்டியிருக்கிறார் சாய் பல்லவி.

இந்த பாகத்தின் ஹீரோ ராவணன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு இந்திரனை வீழ்த்தி மூவுலகையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அசுர சக்தியாக வளர்ந்து நிற்பதிலிருந்து சீதையைக் கடத்துவது வரை திரையை நிரப்பியிருக்கிறது ராவணனாக களமாடியிருக்கிற யஷ்ஷின் ஆளுமையான நடிப்பு.

சூர்ப்பனகையாக ரகுல் பிரித்சிங், லஷ்மணனாக ரவி துபே, தசரதனாக அருன்கோவில் என ஒவ்வொருவரும் மனதில் பதிகிறார்கள்.

சடாயூ பறவை சார்ந்த காட்சியிலிருந்து ராவணன் சீதையைக் கடத்தும் புஷ்பக விமான உருவாக்கம்வரை சி ஜி, வி எஃப் எக்ஸ், கலை இயக்குநர் உள்ளிட்ட டீமின் ஹார்ட் ஒர்க் படம் முழுக்க தெரிகிறது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் பரவச உணர்வுக்கு கொண்டு போக பின்னணி இசை சுறுசுறுப்பூட்டுகிறது.

நடிகர் நடிகைகளின் கச்சிதமான பங்களிப்பு, படத்தின் பிரமாண்டம், விஷுவல் டிரீட்டாக கண்களை நிறைக்கும் காட்சிகள், ‘3 டி’யில் பார்க்கும் அனுபவம் என எல்லாமுமாக சேர்ந்துகொள்ளும்போது 3 1/4 மணி நேரமும் உற்சாகமாகவே கழிந்து விடுகிறது. குடும்பத்தோடு பார்ப்பதாக இருந்தால் அரக்கன் அதுஇதுவென மிரட்டும் காட்சிகள் குழந்தைகளின் மனதை குதூகலமாக்கும்.

அடுத்த பாகத்தில் ராமர் அடித்து ஆடும் அத்தியாயங்கள் அணிவகுக்கும்… இரண்டாம் பாகத்துக்கான லீடாக அனுமனாக பாபி தியோல் பாய்ச்சல் காட்டும்போது ஆன்மிக ஈடுபாடுள்ளவர்களுக்கு உடல் முழுக்க சிலிர்ப்பு பரவக்கூடும்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்