‘அவள் அப்படித்தான் 2′ சினிமா விமர்சனம்

‘உரிமைன்னு கண்ணை உத்துப் பார்க்கலாம்; குத்திப் பார்க்கக் கூடாது’ என வலியுறுத்துகிற கதைக்களம்.

பெண்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற ஆண்களை கண்டிக்கிற விதத்திலான ஒரு படம்.

மஞ்சு அன்று வழக்கம்போல் வேலைக்குப் போகிறாள். ஆனால், வழக்கம்போல் மாலை வீட்டுக்கு திரும்பாமல் இரவு முழுக்க எங்கேயோ பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வருகிறாள். அவளது வீட்டாரும் கணவனும் ‘இரவு எங்கு போயிருந்தாய்?’ என விசாரிக்கிறார்கள். பதில் சொல்ல மறுக்கிறாள்.

கணவனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. ‘இரவு எங்கே போயிருந்தாய், பதில் சொல்லு’ என கேட்டுக் கொண்டேயிருக்கிறான். அப்படியே ஒன்றிரண்டு நாட்கள் கழிகிறது. அவள் பதில் சொல்லாததால் வீட்டின் இயல்பு நிலை கெடுகிறது.

ஒரு கட்டத்தில் ‘நீ மட்டும் எத்தனையோ நாள் இரவில் வீட்டுக்கு வந்ததில்லை; அதற்கு சரியான காரணமும் சொன்னதில்லை. அப்படியிருக்க நான் மட்டும் சொல்ல வேண்டுமா?’ என்கிற ரீதியில் கணவனிடம் விவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை முற்றுகிறது.

அதன்பின், உண்மையில் அவள் எங்கு போயிருந்தாள்? எதற்காக போயிருந்தாள்? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் திரைக்கதை நகரும் என்று பார்த்தால், அப்படியில்லாமல் வேறு விதமாக பயணிப்பதும் முடிவதும் படத்தின் தனித்துவம். இயக்கம் ரா. மு. சிதம்பரம்

பெண்ணியம் பேசுபவள், சுதந்திரமாக வாழ விரும்புபவள், பெண் விடுதலை, பெண்களுக்கான சுதந்திரம், பெண்கள் செய்த புரட்சி உள்ளிட்டவற்றை சுமந்திருக்கும் புத்தகங்களின் தீவிர வாசகி, ஜெயகாந்தனின் எழுத்துக்களை அதிகம் நேசிப்பவள், ஆசிரியர் பணியிலிருப்பவர், ஒரு சிறுமிக்கு தாய் என வடிவமைக்கப்பட்ட பாத்திரத்தில் சிநேகா பார்த்திபராஜா பொருந்தியிருக்கிறார். திமிர், தெனாவட்டை அளவாக வெளிப்படுத்தி வசனங்களில் கம்பீரம் கூட்டியிருக்கிறார்.

கதைநாயகியின் கணவராக அபுதாகீர், அம்மாவாக அனிதா ஸ்ரீ, அப்பாவாக இயக்குநர் வெங்கட்ரமணன், மகளாக கார்த்திகா, ஆச்சியாக சுமித்ரா, கணவரின் அம்மாவாக ராஜேஸ்வரி என படத்தில் நடித்தவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவென்றாலும் நடிப்பில் குறையில்லை.

‘இன்னைக்கு நைட் வீட்டுக்கு வந்துடுவீயாம்மா?’ என அந்த குழந்தை கேட்கும் காட்சி நெகிழ்ச்சி.

‘உரிமைன்னு கண்ணை உத்துப் பார்க்கலாம்; குத்திப் பார்க்கக் கூடாது.’ சில காட்சிகளில் வசனங்கள் நறுக் சுறுக்.

வேதா செல்வத்தின் ஒளிப்பதிவும், அரவிந்த் சித்தார்த்தின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

கதைநாயகிக்கு ஏழெட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் அவள் அழகான, வண்ணமயமான உடையணிந்திருக்கிறாள். கதையின் காலகட்டம் சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கிறது. அது கதைநாயகி கணவனோடு மனதளவில் இதமாக உடலளவில் இணக்கமாக இருந்த தருணத்தை பதிவு செய்கிறது. அப்போது அவர்களின் பெட்ரூமில் அவர்களின் மகள் போட்டோ இருக்கிறது. நிகழ்கால கதையில் அந்த மகள் என்ன வயதில் இருக்கிறாளோ அதே வயதில், அதே உடையில் எடுத்த போட்டோ. காட்சிகளை ஏனோதானோவென எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது.

மல், ரஜினி, ஸ்ரீபிரியா, சரிதா என பலர் நடித்து, ருத்ரய்யா இயக்கி, 1978-ல் வெளிவந்து பெரியளவில் பேசப்பட்ட படம் அவள் அப்படித்தான்.’ அந்த காலத்திலேயே பெண்ணியம், பெண் சுதந்திரம், புரட்சி என்றெல்லாம் பேசிய படம் அது. அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் இது. இரண்டிலும் கதைநாயகியின் பெயர் மஞ்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here