Home விமர்சனம் அனோமி (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

அனோமி (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

கடந்த வருடம் வந்த ‘ஆர்யன்’ என்ற படத்தில் ஒரு கேரக்டரின் வேலை நல்லவர்களாக தேர்ந்தெடுத்து கொலை செய்வது. அதற்கு சொல்லப்படுகிற காரணம் பைத்தியக்காரத்தனமாகவும், எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகவும் இருக்கும்.

இந்த படத்தில் ஒரு கேரக்டர் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து கொலை செய்ய, அந்த தேர்ந்தெடுப்புக்கு சொல்லப்படுகிற காரணமும் பைத்தியக்காரத்தனமாகவே இருக்கிறது. பைத்தியக்கார மனநிலையில் இருந்து யோசித்தால் கொலைகளில் ஒரு துளி நியாயம் இருப்பது போல் தோன்றுகிறது.

அந்த கொலைகாரனை கதைநாயகி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது அனோமியின் திரைக்கதை…

தடயவியல் நிபுணரான சாராவுக்கு அவரது தம்பியின் தற்கொலையில் சந்தேகம் ஏற்படுகிறது. காவல்துறை உயரதிகாரியுடன் கை கோர்க்கிறார். இருவருமாக சேர்ந்து அலசி ஆராய, சாராவின் தம்பியைப் போலவே பலர் மரணமடைந்திருப்பது தெரியவருகிறது. எல்லாமே திட்டமிட்ட கொலைகள் என்பது உறுதியாகிறது.

கொலைகள் எதற்காக? செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு இயக்குநர் ரியாஸ் மரத்தின் திக் திக் திரைக்கதை பதில் சொல்கிறது.

சாராவாக பாவனா. தடயவியல் நிபுணராக பணியில் காட்டும் சுறுசுறுப்பு, தம்பியின் மரணம் தருகிற கலக்கத்தின் பிரதிபலிப்பு, மரணத்துக்கான காரணத்தை கண்டறிந்து கொலையாளியை நெருங்குவதில் வேகமும் விவேகமும் கலந்த துடிப்பு என பயணித்திருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக ரகுமானின் ஆளுமையும் அனுபவ நடிப்பும் அவர் சார்ந்த காட்சிகளுக்கு பெரும்பலம்.

பாவனாவின் தம்பி, தனக்கென ஒரு நியாயம் வைத்துக்கொண்டு செயல்படும் டாக்டர் என இன்னபிற நடிகர்கள் கேரக்டர்களை உள்வாங்கி நடித்திருக்க,

மெடிக்கல் கிரைம் திரில்லர் கதையோட்டத்துக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றியிருக்கிறது ஹர்ஷவர்தன் ராமேஸ்வரனின் பின்னணி இசை. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவின் நேர்த்தியாலும் கதைக்களம் விறுவிறுப்டைகிறது.

மரணத்திலிருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்கான துப்பறிகிற காட்சிகள் சிலபல படங்களில் பார்த்தது போலவே இருப்பது சற்றே அயர்ச்சி தருகிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பது அயர்ச்சியின் சதவிகிதத்தை அதிகரிக்கிறது.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்