திறமையாளனுக்கு, நேர்மையாளனுக்கு, தேசப்பற்று மிக்கவனுக்கு நம் நாடு என்ன வெகுமதி வழங்கும் என்பதன் நீள அகலங்களை ராவாகப் பதிவு செய்திருக்கும் ‘ராக்கெட்ரி.’
வணிக சினிமாக்களுக்கு மத்தியில் வணங்கவேண்டிய சினிமா!
ராக்கெட் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் அமெரிக்காவால், ரஷ்யாவால் முடியாததைக் கூட சாதித்துக் காட்டியவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். இன்றைக்கு இந்தியாவிலிருந்து சீறிப்பாய்கிற அத்தனை ராக்கெட்டுகளுக்கும் நம்பியின் மூளை உருவாக்கிய தொழில்நுட்பமே அஸ்திவாரம் என்பது உண்மையான வரலாறு!
வானளாவப் புகழ்ந்து போற்றவேண்டிய அவரை, தேசத்துரோகி என பொய்யாக குற்றம்சாட்டி பூமியில் மிதித்துத் தள்ளி, சிறைவாசத்தை சன்மானமாகக் கொடுத்து கொடுமைப்படுத்தியது அன்றைய அரசாங்கம். கொடுமைகளை அனுபவித்தது அவர் மட்டுமல்ல; அவருடைய ஒட்டுமொத்தக் குடும்பமுமே. இதுவும் வரலாறு!
நீதிமன்றத்தை நம்பிப் படியேறிய நம்பி தன் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையும் சித்தரிக்கப்பட்டவை என நிரூபித்து நிரபராதியாக விடுதலையாகி, இந்தியாவின் உயரிய விருதினைப் பெற்றதும் வரலாறு!
அந்த வரலாற்றை நம்பி நாராயணனாக பாத்திரமேற்று, இயக்கி ஆவணப் படுத்தியிருக்கிறார் ஆர். மாதவன். அந்த முயற்சிக்காகவே எழுந்து நின்று பாராட்டலாம்!
படத்தின் முன்பாதி ராக்கெட் தொழில்நுட்பம், அதற்கான பயிற்சி, அமெரிக்காவின் சூழ்ச்சி, ரஷ்யாவின் போர்ப் பதற்றம், பாகிஸ்தான் வழியாக ராக்கெட்டுக்கான பாகங்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது என நீள்வது அயர்ச்சி. ஆனாலும், இந்த கதையை அந்தவிதத்தில்தான் சொல்ல முடியும்; அதுவும் மாதவன் அறிமுக இயக்குநர் வேறு என்பதை உணர்ந்து பொறுமையாக காத்திருந்தால், பின்பாதி நம்பி நாராயணன் சுமந்த வலிகளை, கொடுமைகளை விவரிக்கும் காட்சிகளால் உறைந்துபோவதும் படத்தோடு ஒன்றிப்போவதும் உறுதி!
தொப்பை, தாடி, முதுமை என தோற்றத்தை நம்பி நாராயணனாக மாற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் அவராகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன். புலனாய்வு விசாரணை அதிகாரிகளால் அவர் அடித்துத் துவைக்கப்படும்போது மென் நெஞ்சங்கள் கண்டிப்பாக கலங்கும்! மாதவன், ராக்கெட் தொழில்நுட்ப சங்கதிகளை முடிந்தவரை அறிந்து புரிந்து, நிஜ நம்பியுடன் அலசி ஆராய்ந்து திரைக்கதை அமைத்திருப்பது காட்சிகளின் கனத்தால் உணர முடிகிறது! இப்படியொரு படத்தை இயக்கியதற்காக, ஏற்ற பாத்திரத்திற்கு உயிரூட்டிய நடிப்புக்காக சர்வதேச அளவில் அங்கீகாரங்களும், இந்தியாவின் உயரிய விருதுகளும் குவியவேண்டும். குவியும்!
நம்பிக்கு மனைவியாக வருகிற சிம்ரனிடமிருந்து வெளிப்படுகிறது தேர்ந்த நடிப்பு.
அப்துல்கலாமாக வருகிறவரிலிருந்து இன்னபிற பாத்திரங்கள் ஏற்றிருக்கிற அத்தனை நடிகர்களும் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருப்பது பலம்!
நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை ஒரு நீளமான பேட்டியின் வழியாக உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுபவராக வருகிற சூர்யாவின் முகபாவத்தில் தெறிக்கிற உணர்ச்சி நம்பி நாராயணனுக்கு இந்த தேசம் இழைத்த அநீதிகளுக்கான ஒட்டுமொத்த தேசத்தின் மன்னிப்பு கேட்கிற முயற்சி!
கிளைமாக்ஸில், நம்பியாக நடிக்கிற மாதவன் விலகி, நிஜ நம்பி நாராயணனே தோன்றுவது கதைக்களத்துக்கு ஜீவனூட்டியிருக்கிறது!
கதை நிகழ்விடங்களில் கதைக்கேற்ற பிரமாண்டத்தைக் கொண்டு வந்திருப்பதும், ஒளிப்பதிவின் நேர்த்திக்காகவும் படக்குழுவை அழுத்தமாக கை குலுக்கிப் பாராட்டலாம்!
சாம் சி.எஸின். பின்னணி இசையைக் குறை சொல்வதற்கில்லை; நிறை என மெச்சுவதற்குமில்லை!