கபடி வீரர்கள் இருவரது வாழ்க்கையில், அவர்கள் எடுக்கும் முடிவுகள் சடுகுடு ஆடுகிற கதை.
உதயன், குமார் இருவரும் கபடியில் இறங்கினால் எதிரணிக்கு தோல்வி உறுதி. அப்படி அசத்துபவர்கள் கந்து வட்டி பிசினஸ் செய்கிற பைரவனின் கபடி அணியுடன் மோதுகிறார்கள்; ஜெயிக்கிறார்கள். தனது அணியை வீழ்த்திய உதயன், குமார் இருவரின் திறமை உணர்ந்து அவர்களை தனது அணிக்காக விளையாட கேட்டுக்கொள்ளும் பைரவன், அதற்காக பெரியளவில் பணம் தருகிறார். அதற்கு ஆசைப்பட்டு பைரவனுடன் இணைபவர்கள், நாட்கள் போகப்போக அவர் செய்யும் சமூக விரோத காரியங்களுக்கு துணையாக நிற்கிற அடியாட்களாக மாறுகிறார்கள்.
சரியான பாதையில் போய்க் கொண்டிருந்தவர்கள் தப்பான ரூட்டில் பயணத்தை துவங்கினால் அதன் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும் என்பது தெரிந்த கதை. அது எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது பல்டியின் பாக்கி கதை.
உதயனாக ஷேன் நிகம். அவர் நடிக்கும் 25-வது படம் இது. கபடியில் அசுரத்தனம், நண்பன் மீதான பாசத்தில் அக்மார்க் தரம் என நடிப்பில் பாய்ச்சல் காட்டியிருப்பவர், ரொமான்ஸ், சென்டிமென்ட் என எல்லா பக்கமும் ஸ்கோர் செய்கிறார்.
குமாராக சாந்தனு. நல்லவர்தான் என்றாலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்ற எண்ணத்தில் மனம் போன போக்கில் முடிவெடுக்க, அந்த முடிவுகள் அவருக்கு வைக்கிற ஆப்பு பெரிதாக இருக்கிறது; நடிப்புப் பங்களிப்பு பாராட்டும்படி இருக்கிறது.
இருவரும் ஆக்சனில் செய்திருக்கும் அதிரடிக்காக தனியாக பாராட்ட வேண்டும்.
பைரவனாக செல்வராகவன். கந்து வட்டி பிசினஸில் மனிதாபிமானத்தை முழுமையாக துடைத்தெறிந்தவராக அவரது நடிப்பு மிரட்டல்.
உதயனின் காதலியாக பிரீத்தி அஸ்ராணி. வருகிற காட்சிகள் குறைவென்றாலும் அந்த ‘ஜாலக்காரி’ தருகிற் நடிப்பில் சரியான அளவில் உணர்வு பொங்குகிறது.
இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனின் கெட்டப் அந்தக்கால நாகேஷ், சந்திரபாபு ரேஞ்சுக்கு இருந்தாலும் வில்லத்தனமும் ஆக்சன் அட்டகாசமும் எம்.ஜி.ஆரை கதறவிடும் நம்பியார் ரேஞ்சுக்கு இருக்கிறது.
பூர்ணிமா இந்திரஜித் ஏற்ற வில்லி கதாபாத்திரத்திற்கு பொருந்துகிற விதமாய் கெத்து காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புலிக்கல் கதை நிகழும் கோவை – கேரளா பார்டர் பகுதிகளை கழுகுப் பார்வையால் கொத்தித் தூக்கியிருக்கிறார். அந்த தரத்துக்கு மதிப்பெண்களை அளவு பார்க்காமல் அள்ளி வீசலாம்.
படத்தின் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்றாலும், 80% காட்சிகளின் இயக்குநர்கள் சண்டைப் பயிற்சியாளர்கள் ஆக்சன் சந்தோஷும், விக்கியும்தான் என்பது அடிக்கோடிட்டு பதிவு செய்ய வேண்டிய செய்தி.
அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் ‘ஜாலக்காரி’ ஏற்கனவே தாறுமாறாய் ஹிட்டடித்திருக்க, காட்சியாகவும் மனதில் நிறைகிறது. பின்னணி இசையில் கதையின் வேகத்துக்கு வெறியேற்றும்படி புகுந்து விளையாடியிருக்கிறார் அந்த இளம்புயல்.
கதையில் பலமில்லை என்றாலும் அலுப்பு சலிபில்லாமல் பார்க்க வைக்கிறது படத்தின் மேக்கிங். லாஜிக் பற்றிய சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு உட்கார்ந்தால், ரத்தச்சகதியோடு ஆக்சன் விருந்து சாப்பிட்டு ஏப்பம் விடலாம்.
எது இருக்கிறதோ இல்லையோ, படத்தில் ‘கெட்டவனோடு சேர்ந்தால் கெட்டது மட்டும்தான் நடக்கும்’ என்ற அறிவுரை இருக்கிறது.
பல்டி _ வினையான விளையாட்டு!
-சு.கணேஷ்குமார்

