Home விமர்சனம் பத்தா சினிமா விமர்சனம்

பத்தா சினிமா விமர்சனம்

பயம் என்னவெல்லாம் செய்யும்?

இந்த கேள்விக்கான பதிலாய் விண்டேஜ் சினிமாவாக விரிகிற பத்தா.

ஊரையே பயந்து நடுங்க வைக்கிற ரவுடி பத்தாவை, எட்டு வயது சிறுவன் ஒருவன் எட்டே நாட்களில் திருத்தி நல்லவனாக்குகிற கதை.

சிறுவன் அப்படி என்னதான் செய்கிறான்?

பத்தாவை எட்டு நாட்கள் ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறான்.

அது எப்படி, ஏன் என்பதெல்லாம் திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யங்கள்…

பத்தாவாக விஜய் சேதுபதி. ஆரம்பக் காட்சியில் ஒரு இளைஞனை ஊர் மக்கள் மத்தியில் போட்டுப் பொளந்து, கையை உடைத்து ரத்தவெறியைக் காட்டி, தான் அந்த பகுதியின் டான் என்பதை காட்டுகிறார். ‘சரிதான், இனி படம் முழுக்க அடிதடியாகத்தான் இருக்கும், வெட்டுக்குத்து சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது’ என்ற முடிவுக்கு வருகிறோம். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல், கழிவறையில் சிக்கியிருக்கும் நாட்களில் டானுக்கான கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கண் கலங்கித் தவிக்கிறார். உயிர் பிழைத்து வந்தபின், தனது தவறுகளை உணர்ந்து திருந்துகிறார். அவரது நடவடிக்கைகளில் சில கோமாளித்தனமாகவும் இருக்கிறது. அதையெல்லாம் பார்க்கும்போது இது போன்ற வேடத்தை வேறெந்த முன்னணி ஹீரோவும் ஏற்று நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர முடிகிறது. அப்படியொரு அர்ப்பணிப்பான நடிப்பு கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறது.

ஊருக்கு ரவுடி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னிடமும் ரவுடியாகவே நடந்து கொள்ளும் கணவன். அந்த கொடுமைகளைத் தாங்கிக் கொண்டும், எப்போதாவது காட்டும் அன்பின் நனைந்து கொண்டும் நாட்களைக் கடத்துகிற வேலை லிஜோமோல் ஜோஸுக்கு. கேரக்டராகவே மாறிவிடுகிற தனது வழக்கத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்.

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்றால் கதையின் ஹீரோ சாய் ப்ரித்வி ராஜ். பத்தா மீதுள்ள பயத்தை வெளிப்படுத்தும் முகபாவத்துக்காகவும் உடல் மொழிக்காகவும் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்களை கொட்டிக் குவிக்கலாம். வரும் நாட்களில் விருதுகளும் சுற்றி வளைக்கப் போகிறது.!

மகளாக சஹஸ்ரா, இன்னபிற முக்கிய கேரக்டர்களில் அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்புப் பங்களிப்பை குறையின்றி செய்திருக்க,

கதைக்கும் கதை நடக்கும் காலகட்டத்துக்கும் பொருந்திப் போகும் பின்னணி இசையைத் தந்து  ‘பத்தாவோட ஒத்த டான்’ பாடல் வழி உற்சாகமூட்டி, ‘மகளே’, ‘மொழியே’ பாடல்களில் எமோஷ்னல் டச்சை ஏற்றியிருக்கிறார் சாய் அபயங்கர்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பின்னோக்கிய காலகட்டத்தை ஒவ்வொரு பிரேமிலும கொண்டு வந்திருப்பதில் கலை இயக்குநர் கண்ணன், காஸ்ட்யூம் டிஸைனர் முகமது சுபீர் கூட்டணிக்கு பெரும் பங்கிருக்கிறது.

லைட்டிங், கோணம் என பார்த்துப் பார்த்து ஷாட்டுக்கு ஷாட் காட்டியிருக்கிற நேர்த்தியால் டென்ட் கொட்டாய் காலத்துக் கைப்பிடித்து கூட்டிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே.

கெட்டவன் திருந்தி நல்லவனாகிற வழக்கமான கதைதான். அதில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விறுவிறுப்பு, சுவாரஸ்யம், காமெடி என கமர்சியல் மசாலாக்களை பதமாக தாளித்துக் கொட்ட பத்தாவுக்கு கெத்தான முகம் கிடைத்திருக்கிறது!

-சு.கணேஷ்குமார்  

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்