‘கோப்ரா’ சினிமா விமர்சனம்
இந்தியாவில் முதலமைச்சர் ஒருவர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய ராணுவ ஜெனரல் என மிகமிக உயரிய பாதுகாப்பில் இருப்பவர்களை சாதுர்யமாக திட்டமிட்டு, மாறுவேடங்களில் சென்று தீர்த்துக் கட்டுகிறார் விக்ரம்.
விக்ரம் யார்? அத்தனை பெரிய பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்களை விக்ரம் நெருங்குவது எப்படி சாத்தியம்? அவர்களை கொல்வதற்கான காரணம் என்ன? இப்படியான கேள்விகளுக்கு தொடரும் பரபரப்பான காட்சிகளில் பதில்கள் கிடைக்கின்றன. இயக்கம்: அஜய் ஞானமுத்து
சிலபல கெட்டப்களில், இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் விக்ரம். வழக்கம்போல் ஏற்கும் பாத்திரமாக மாறுகிற அர்ப்பணிப்பு, துடிப்பான நடிப்பு என கவர்கிறார். அந்த, !பாதிரியாராக தோற்றம் மாறுகிற காட்சி மிரட்டல்
கார்ப்பரேட் தொழிலதிபர்களை வில்லனாக்கினால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் ஒழுங்கு தவறாமல் செய்கிறார் ரோஷன் மேத்யூ.
ஏற்றிருக்கும் இன்டர்போல் விசாரணை அதிகாரி பாத்திரத்துக்கு தனது கம்பீரமான நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் இர்பான் பதான்.
விக்ரமின் காதலிகளாக வருகிற மிருணாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி இருவரில் ஸ்ரீநிதியின் இயல்பான நடிப்பும், இன்னொரு நாயகியான மீனாட்சி கோவிந்தராஜனின் துறுதுறுப்பும் கவர்கிறது.
கே.எஸ். ரவிக்குமார், சுரேஷ்மேனன், ஆனந்த்ராஜ் என நிறைய நடிகர் நடிகைகள். அவரவர் பாத்திரங்களை சரியாக, நிறைவாகச் செய்திருக்கிறார்கள்!
வழக்கமான அச்சுப்பிச்சு காமெடியில் அதிகப்பிரசங்கித்தனம் செய்கிற ரோபோ சங்கர் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்!
இடைவேளை வரை பரபரப்பாக நகரும் கதை பின்னர் அம்மா – மகன் சென்டிமென்ட், அண்ணன் – தம்பி சென்டிமென்ட், அண்ணன் – தம்பி பகை, ஹீரோவுக்கு நேரும் இல்யூஷன் பாதிப்பு என பயணிப்பது வெண்டைக்காயை நறுக்கி விளக்கெண்ணெய் விட்டுப் பிசைந்தது போலிருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில், முன்னரே ஆல்பத்தில் ஹிட்டான பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மனதை வருடுகிறது!
நாடு நாடாய் சுற்றிச் சுழன்றிருக்கிறது ஹரீஷ் கண்ணனின் கேமரா கண்கள்!
வானளாவிய பாதுகாப்பு அம்சங்களைத் தகர்த்து இளவரசரைக் கொல்கிற காட்சி ஹைலைட்! அந்த காட்சிக்காக சிந்தித்ததில் பாதியளவுக்காவது மற்ற காட்சிகளுக்காக சிந்தித்திருந்தால், படத்தின் நீளத்தைக் சற்றே குறைத்திருந்தால் கோப்ரா கூடுதலாய் ஈர்த்திருக்கும்!
விக்ரமின் நடிப்புக்காக, காட்சிகளின் பிரமாண்டத்துக்காக பார்க்கலாம்.