ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து, கிங்ஸ்லி இயக்கியிருக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா.’ ’18 ரீல்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்துள்ள இந்த படம் இன்று (30.12.2022) வெளியாகியுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகன ஓட்டுநராக நடித்திருக்கிறார். இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்றது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 40-க்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். படத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுடன் கலந்துரையாடினர். ஓட்டுனராக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் வாகன வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் தொழிலும் ஒன்று. இன்று இந்த தொழிலிலும் பெண்கள் நுழைந்து பயிற்சி பெற்று, திறமை மிக்க ஓட்டுனர்களாக வலம் வருகின்றனர். சுய தொழில் செய்து குடும்பத்தின் மேன்மைக்காக அயராது பாடுபடும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 40-க்கும் மேற்பட்ட பெண் ஓட்டுநர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை ‘டிரைவர் ஜமுனா’ படக்குழு நன்கொடையாக வழங்கியது. ஆட்டோவை ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கினார்.சுய முன்னேற்றத்தை விரும்பும் பெண்களுக்கு அடையாளமாக இந்த பரிசு இருந்தது என பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். திரில்லர் ஜானரில் தயாரான ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம், பெண்களிடத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.