சாதித் தலைவர் போல் பார்க்கப்படுகிற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அவர் சாதித் தலைவரல்ல; மக்கள் நலன் சார்ந்து ஏராளமான விஷயங்களை சாதித்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த படத்தைப் பார்த்தாலும் அதை புரிந்து கொள்ளலாம்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயணித்தவர்.
காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தவர். காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டபோது மகாத்மா காந்தியின் முன்னிலையில் காங்கிரஸிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டவர்.
காமராஜர் என்ற பெருந்தலைவர் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமைக்குரியவர்.
பிறந்த சில மாதங்களிலேயே அன்னையை இழந்து இஸ்லாமியப் பெண் ஒருவரால் பால் புகட்டி வளர்க்கப்பட்டவர்; வளர்த்தவரை காலம் முழுக்க வணங்கி மதித்தவர்.
எதிரிகள் சரமாரியாக தாக்கியபோதும் பயம் என்ற உணர்வு துளியுமின்றி அவர்களை வீழ்த்தி முன்னேறியவர்.
போலீஸ் அதிகாரிகள் கைது செய்யவரும்போது தன்னை தலைவனாக ஏற்றுக்கொண்ட மக்கள் கொந்தளிப்பதை அடக்கி, அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யட்டும் என்று சொல்லி கம்பீரமாக கைதானவர்.
தலித் சமூகத்தின் தலைமையாக இயங்கிய இமானுவேல் சேகரன் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட, அதில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்; அந்த வழக்கில் குற்றமற்றவர் என விடுதலையானவர்.
சுதந்திர இந்தியாவில் எம் எல் ஏ, எம் பி என பொறுப்பு வகித்தவர்.
காலம் முழுக்க பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர்; தனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தன்னை பெண் நர்ஸ் தொட்டு சிகிச்சையளிக்க மறுத்தவர்.
இறப்புக்கு முன் சித்தர்போல் நாட்களைக் கடத்தியவர்.
இறப்புக்கு பின் சன்மார்க்க முறைப்படி தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டவர்; அப்படியே அடக்கம் செய்யப்பட்டவர்.
-இப்படி ‘தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள்’ என்று சொல்லி அதன்படி வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் எதையும் விட்டுவிடாமல் காட்சிகளாக்கி படத்தை இயக்கியிருக்கிறார் ‘ஊமை விழிகள்’ அரவிந்த்ராஜ்.
தேவராக ஜெ எம் பஷீர். நடை உடை நடவடிக்கைகளில் தேவரை பிரதிபலித்திருக்கிறார். தேவரே நம் கண்முன் வலம் வருகிற உணர்வைத் தருகிறார்.
தேவரை தேர்தலில் எதிர்த்து தோல்வி கண்ட மன்னர் குல வாரிசாக வாகை சந்திரசேகர், தேவர் சிக்கவைக்கப்பட்ட வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கிற நீதிபதியாக இயக்குநர் பாரதிராஜா, தேவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைக்கிற வழக்கறிஞராக டத்தோ ராதாரவி, தேவரின் வாழ்க்கை வரலாற்றை சிலிர்ப்பூட்டும் விதமாக தனது ஜூனியர் அட்வகேட்களுக்கு எடுத்துச் சொல்கிற வழக்கறிஞராக இந்த படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ், ஜவஹர்லால் நேருவாக வருகிறவர், காந்தியாக ராட்டையில் நூல் நூற்றபடி அமர்ந்திருப்பவர் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை முடிந்தவரை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
தேவரை போற்றிப் புகழும் பாடல்களை மனதில் பதியும்படி தந்திருக்கும் இசைஞானி இளையராஜா பின்னணி இசையில் கதையின் நகர்வுக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார்.
கலை இயக்குநரின் பங்களிப்பு தேவர் வாழ்ந்த காலகட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது. ஒளிப்பதிவு நேர்த்தி.
பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டிய படங்களை எளிய பட்ஜெட்டில் எடுத்தால் என்ன மாதிரியான ரிசல்ட் கிடைக்குமோ அது இந்த படத்துக்கும் கிடைத்திருக்கிறது.
உருவாக்கத்தில் குறைகள் சில இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்,
முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை நாமும் நம் வீட்டுப் பிள்ளைகளும் பார்க்கத் தகுந்த படைப்பாக உருவாக்கியதற்காக படக்குழுவை பாராட்டலாம்!
-சு. கணேஷ்குமார்

