‘இ எம் ஐங்கிறது அட்டைப் பூச்சி மாதிரி, பிடிச்சா விடாது.’ இந்த, யாராலும் மறுக்கமுடியாத கருத்தை மையப்படுத்திய படம்.
அந்த இளைஞன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான்; ஆனால் அது நிரந்தர வேலையில்லை. தான் விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க லோனில் பைக் வாங்குகிறான். விரும்பியவள் கிடைக்கிறாள். அதே நேரம் வேலையிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை. அதையடுத்து லோனுக்கான இ எம் ஐ கட்ட முடியாமல் பைக்கை பறிகொடுக்கும் நிலைமை. அதையெல்லாம் சமாளித்து, காதலித்தவளைக் கல்யாணம் செய்துகொள்கிறான். அவளுக்கு பரிசளிக்க இ எம் ஐ’யில் கார் வாங்குகிறான். இ எம் ஐ கட்ட முடியாமல் அவஸ்தைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறான். அதிலிருந்து அவன் மீண்டானா மாண்டானா என்பது கதையின் மீதி…
ஆடம்பரத்துக்காக கடன் வாங்கி அவதிப்படுகிறவர்களை நேரிலும், சினிமாக்களிலும் ஏராளமாய் பார்த்திருக்கிறோம். அந்த நபர்களின் ஜெராக்ஸ் காப்பியாய், கதைநாயகனாய் சதாசிவம் சின்னராஜ். படத்தை இயக்கியிருப்பவரும் அவரேதான். கவலையின்றி கடன் வாங்கும் அவர், வாங்கிய கடனுக்கு இ எம் ஐ கட்ட முடியாமல் படும் அவஸ்தைகளைப் பார்க்கும்போது ‘உனக்கு இதுவும் வேணும்; இன்னும் வேணும்’ என்ற உணர்வு வருகிறது. இ எம் ஐ கட்ட முடியாமல் திணறும்போது, விபரீத முடிவுக்கும் தயாராகும்போது அவரது நடிப்புக்கு பாஸ்மார்க் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. காதல் காட்சிகளில் துளியளவேனும் புதுமை இருந்திருக்கலாம்.
கதாநாயகி பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தால், அவள் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பற்ற ஆணை காதலிப்பாள்; பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்ப்பு உருவாகும். அதை தாண்டி அவனை கல்யாணம் செய்து கொள்வாள். பிறகு கண்ணீர் சிந்துவாள். அதே வழக்கமான வேலை சாய்தன்யாவுக்கு. அதை சரியான உணர்வுகளுடன் செய்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களை இயக்கிய பேரரசு. பணக்காரத்தனம் காண்பிக்காமல் அக்கறையோடு மகளை அரவணைப்பதில் நேர்த்தி தெரிகிறது.
நண்பன் வாங்கும் கடனுக்கெல்லாம் கேரண்டி கையெழுத்துப் போட்டு, நடுத்தெருவுக்கு வருகிறவராக பிளாக் பாண்டி, அதே நிலைக்கு ஆளாகிறவராக வருகிற இன்னொருவர். இருவரும் சேர்ந்து காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள். தானாக சிரிப்பு வரவில்லை. அதை யாராவது கடனாக தந்தால் இ எம் ஐ கட்டிவிடலாம்.
ஹீரோவின் அம்மாவாக செந்தி குமாரி கனிவான முகம் காட்டி கடந்துபோகிறார். லொள்ளுசபா மனோகர் ஒரே ஸ்டைலில் காமெடி செய்வதை தவிர்க்கலாம்.
அடிக்கடி எட்டிப் பார்க்கும் பாடல்கள் கதையோட்டத்திற்கு போடும் ஸ்பீடு பிரேக்காக இருந்தாலும், ‘அஸ்கு புஸ்குடா’, அடி சூர அழகே’ பாடல்களுக்கு ஸ்ரீநாத் பிச்சை (சிம்பு பாடி பெரியளவில் ஹிட்டான ‘என் நண்பனே’ ஆல்பத்திற்கு இசையமைத்தவர்) இசை மனதில் இதம் பரப்புகிறது. ‘ஐயோ சாமி இ.எம்.ஐ’ பாடல் கதைக்கருவை விவரிக்கும் வரிகளால் மனதில் பதிகிறது.
ஒளிப்பதிவுக்காக பிரான்சிஸ் வழங்கியிருக்கும் உழைப்பு கச்சிதம்.
கதை திரைக்கதையில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும், ‘வசதிக்கேத்தபடி வாழணும்; எது வாங்கினாலும் வர்ற வருமானத்தால சமாளிக்க முடியுமானு பார்த்துக்கணும்’ என்ற அறிவுரையை அழுத்தமாக எடுத்துச் சொன்னதற்காக படக்குழுவை பாராட்டலாம்.
இ எம் ஐ _ கடனாளிகளின் கனிவான கவனத்துக்கு…
-சு.கணேஷ்குமார்