‘எதற்கும் துணிந்தவன்‘ சினிமா விமர்சனம்
‘அண்ணா அடிக்காதீங்கண்ணா ப்ளீஸ்ண்ணா…’ நினைத்தாலே பதைபதைக்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரச் சம்பவங்களை மையமாக வைத்து காதல் கலாட்டா, காமெடி களேபர கமர்ஷியல் மசாலாக்கள் தூக்கலாய்ச் சேர்த்த ‘எதற்கும் துணிந்தவன்.’
அந்த கிராமத்தில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டு, அப்பா அம்மாவின் அதீத பாசத்தை அனுபவித்தபடியே, பக்கத்து ஊர்ப் பெண்ணைக் காதலித்து குதூகலமாகத் திரிகிறார் சூர்யா.
ஊரில் பெண்கள் சிலர் மர்மமாக இறந்துபோக சூர்யாவின் அட்வகேட் மூளை அலசி ஆராய்கிறது. பக்கத்து ஊரைச் சேர்ந்த பணபல பராக்கிரமன் அரசியல் பல அயோக்கியன் ஒருவனின் காமப்பசி, வக்கிரம், கூட்டு வன்புணர்வு, வீடியோ சுருட்டல், அதை வைத்து மிரட்டல், அடங்க மறுப்போருக்கு அகலா மரணத்தை பரிசளித்தல் என தோண்டத் தோண்ட அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…
ரத்தம் சூடாகும் சூர்யா கொந்தளித்துக் கொதிக்க கயவர்கள் எப்படி களையெடுக்கப்படுகிறார்கள் என்பது அடுத்தடுத்த காட்சிகளில் பரபரப்பாக, விறுவிறுப்பாக, கிளைமாக்ஸ் சற்றே வித்தியாசமாக… இயக்கம்: பாண்டிராஜ்
வெகுநாள் கழித்து ‘வேல்’மீசை, வேட்டி சட்டை, வெடிச் சிரிப்பு, காதலியுடன் சிணுங்கல், வில்லன்களைப் பொளக்கும்போது சிங்கப் பாய்ச்சல் என ஜம்மென்றிருக்கிறது சூர்யாவின் கம்பேக்!
காந்தம் பொருத்திய கண்கள், கவிதை பேசும் புருவங்கள், சில்மிஷத்துக்கு தூண்டும் இதழ்கள் நாயகி பிரியங்கா மோகனின் அம்சங்கள் அத்தனையும் கூடவே ஆதினி என்ற அவரது பாத்திரப் பெயரும் அழகு! நடிப்புப் பங்களிப்பு தேவையான அளவு!
வில்லனாக வினய். அமுல் பேபிக்குள் அரக்கன்!
படு சீரியஸான கதையோட்டத்தில் காமெடி காட்சிகள் தேவைதானா? என்ற கேள்வி எழுந்தாலும் இளவரசு – தேவதர்ஷினி ஜோடியின் அலப்பரை அட்ராசிடி கலகலப்புக்கு கேரண்டி. கூடவே சூரியும் சுறுசுறுப்பூட்டுகிறார்.
சூர்யாவின் பெற்றோராக சத்யராஜ் – சரண்யா பொன்வண்ணன் அத்தனை கச்சிதம். அவர்களை சிரிப்பு சிப்ஸ் தூவ விட்டிருப்பது திருஷ்டிப் பரிகாரம்.
நியூஸ் ரீடர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என படிக்கட்டுகள் ஏறி நடிகையாகியிருக்கிற திவ்யா துரைசாமிக்கான பாத்திரம் கனம்; அவர் காட்டியிருக்கும் திறம் கச்சிதம்!
கொஞ்ச நேரமே வந்தாலும் வேலராமமூர்த்தியின் டிரேட் மார்க் நடிப்பு துடிப்பு!
விஜய் டி.வி. ராமர், தங்கதுரை, புகழ் என நட்சத்திரங்களுக்குப் பஞ்சமில்லை.
நாயகன், நாயகியை கடத்தப் போவதாக சவால் விட்டு எதிர்பார்ப்பை உருவாக்க, அந்த காட்சியின் டிவிஸ்ட் ரகளை!
இமான் இசையில் சும்மா சுர்ருனு பாடல் ரசனைக்கும், பாடல் காட்சியும் நாயகன் நாயகியின் உடைகளும் கண்களுக்கு விருந்து! பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு பாலமாய் பலமாய்!
ரத்னவேலின் ஒளிப்பதிவு நிறைவு!