‘கிளாப்‘ சினிமா விமர்சனம்
தமிழ் சினிமாவுக்கு, விளையாட்டை மையமாக கொண்ட மற்றுமொரு சீரியஸான படம்!
திறமையான விளையாட்டு வீரர்கள் உயர்சாதிக்கார உயரதிகாரிகளிடம் சிக்கிச் சீரழியும் வழக்கமான கதை. திரைக்கதையில் சற்றே விறுவிறுப்பு கூட்டி ‘கிளாப்‘ஸ் வாங்க முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா.
கதையின் நாயகன் ஆதி தடகள விளையாட்டு வீரர். ஓட்டப்பந்தயங்களில் சாதிப்பவர். அவரது திறமையே அவருக்கு எமனாக, சூழ்ச்சிக்குப் பலியாகி பந்தயங்களில் கலந்து கொள்ள முடியாமல் முடங்குகிறார்.
அவருக்கு, விளையாட்டில் சாதிக்க நினைத்தும் சூழ்நிலை காரணமாக ஒதுங்கியிருக்கும் இளம்பெண் ஒருவரைப் பற்றி தெரியவருகிறது.
தான் சாதிக்க முடியாத இலக்கை அந்த பெண்ணை வைத்து அடைய நினைத்து களமிறங்குகிறார். அதிகார பலம் அவர்கள் இருவரின் முயற்சிக்கும் முடிந்தவரை முட்டுக்கட்டை போடுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் திணறடிக்கும் அந்த தடைகளை எப்படி தகர்க்கிறார்கள் / வெல்கிறார்கள் என்பதே கதை.
ஆதி, ஓட்டப் பந்தய மைதானங்களில் திறமை காட்டும்போது படு ஸ்மார்ட்டாக வந்து, கால் முடமாகி முடங்கும்போது பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். வெல்டன்!
உடற்கட்டு பொருந்திப் போக மென்சோகம், அழுகை, அசுரத்தனமாக ஓட்டம் என தான் ஏற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் கிருஷா க்ரூப்.
ஆதியின் மனைவியாக வரும் அகான்ஷாவின் அளவான நடிப்பும் அசத்தல். கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி!
விளையாட்டுத் துறையில் உயர் பொறுப்பு, சாதிப்பற்று, அதிகார மமதை என அழுத்தமான பாத்திரத்தில் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டல்!
பிரகாஷ் ராஜ், மைம் கோபி என சீனியர் நடிகர்களின் தேர்ந்த நடிப்புப் பங்களிப்பும் படத்தில் உண்டு.
கொள்கைபிடிப்பு மிக்க பத்திரிகையாளராக வருகிற (இந்த படத்தின் தயாரிப்பாளர்) கார்த்திகேயனும் கவர்கிறார்.
இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஜீவனுட்ட, டைட்டில் பாடலும், ‘காற்றிலே ஏறிவா’ பாடலும் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் என இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் நிறைவு!
சோனி லைவ் ஓடிடி தளத்தில் 11. 3. 2022 வெள்ளியன்று வெளியாகும் இந்த படம், விளையாட்டை மையமாகக் கொண்ட படங்களை விரும்புவோருக்கு திருப்தி தரும்!