பிரமாண்ட படங்களைத் தயாரித்து தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் கே.டி. குஞ்சுமோன். அவர் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படம் 30 வருடங்கள் முன் வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகவிருக்கிறது. ஏ. கோகுல் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். ஆஸ்கர் விருதுபெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார்.
படத்தின் துவக்கமாக பாடல்கள் உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகிறது. கொச்சியில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலஸ் தீவில் பாடல்கள் உருவாக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் கே.டி. குஞ்சுமோன்.
அதற்காக, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வருகிற 19ம் தேதி அங்கு செல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைகிறார்.
எம்.எம்.கீரவாணியும் வைரமுத்துவும் இணைந்து‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’ உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றி விரைவில் தெரியவரும்.