ஷங்கரின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற நம் எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன், முதல்வன், அந்நியன் வகையறா வரிசையில், ஷங்கரின் முதல் தெலுங்குப் படமாக ‘கேம் சேஞ்சர்.’
தன் வாரிசுகளை அமைச்சர்களாக்கி, தப்பும் தவறுமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அந்த முதலமைச்சர் திடுதிப்பென திருந்தி நல்லாட்சி தர நினைக்கிறார். அவரது மன மாற்றம் வாரிசுகளுக்கு அதிர்ச்சி தருகிறது. ஊழல், மணல் கொள்ளை என பழகிப் போயிருக்கும் இளைய மகன் அப்பாவை போட்டுத் தள்ளிவிட்டு முதலமைச்சராக நினைக்கிறார்.
இந்த நிலையில் மணல் கொள்ளை நடக்கும் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்பவர் நேர்மையின் சிகரமாக இருக்கிறார்.
அப்புறமென்ன… கலெக்டர் மணல் கொள்ளையைத் தடுக்க,
அமைச்சர் கலெக்டரை அடக்கி ஒடுக்க நினைக்க,
அவர் அடங்க மறுக்க,
அமைச்சர் கலெக்டரிடம் ‘நான் முதலமைச்சராகி உன்னை ஒழிப்பேன்’ என சவால் விட,
இருவருக்குமிடையே நடக்கும் மோதலின் உச்சமாக கலெக்டரே முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க… நேர்மை ஜெயித்ததா, அல்லது நேர்மையை அநீதி அடித்து துவைத்ததா என்பதே மிச்சசொச்ச கதை.
ராம் சரணுக்கு, வருகிற அத்தனை காட்சிகளிலும் நின்னா தேரு, நடந்தா திருவிழா, உட்கார்ந்தா உற்சவம், கண்ணசைச்சா கட்டளை என்கிற ரேஞ்சுக்கு ஹீரோயிஸம் காட்ட வேண்டிய கட்டாயம். பரந்து விரிந்த உடற் கட்டமைப்பும், முகத்தில் வெளிப்படும் கம்பீரமும் அதற்கு பொருத்தமாக அமைந்துவிட காதல் காட்சிகளில் இளமை பொங்க வலம் வந்து, கலெக்டராகும்போது அதற்கேற்ற மெச்சூரிட்டிக்கு தாவிருக்கிறார். நேர்மையான கலெக்டராக என அவர் செய்யும் அதிரடி அடிதடிகளில் தீ பறக்கிறது; அது ரசிக்கும்படியும் இருக்கிறது. பிளாஷ்பேக்கில் மக்களின் நலப் போராளியாக வேறொரு கெட்டப்பில் வருபவர் திக்குவாய் பிரச்சனைக்கு ஆளானவராக நெகிழ வைக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார்.
அமைச்சராக இருந்து அநியாய அக்கிரமங்களை அடுக்கடுக்காக செய்து முதலமைச்சராகிற எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனத்தில் வழக்கமான அதட்டலும் உருட்டலும் மிரட்டலும் நிரம்பியிருக்க, மொட்டையடித்த தோற்றத்தில் வருவது அவரை சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
அம்சமாக இருக்கிற நாயகி கியரா அத்வானிக்கு பாடல் காட்சிகளில் கணிசமாக கவர்ச்சி காட்டுவதை தவிர பெரிய வேலை ஏதுமில்லை.
சுனிலுக்கு தந்திருக்கிற பக்கவாட்டிலேயே நடக்கிற ‘சைடு சத்யன்’ கதாபாத்திரமும், அவர் நடித்திருக்கும் விதமும் கலகலப்புக்கு உதவியிருக்கிறது.
எஸ் ஜே சூர்யாவின் அண்ணாக வருகிற ஜெயராம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்து, அதற்கு வாய்ப்பில்லை என தெரிந்ததும் தம்பிக்கு அடங்கிப் போகும் காட்சிகளில் மனம் திறந்து சிரிக்க வைக்கிறார்.
அஞ்சலிக்கு இளமையாகவும் வயது முதிர்ந்தவராகவும் களமாடி மாறுபட்ட நடிப்பைத் தந்திருக்க, கெளரவமான வேடத்தை ஏற்று அதை சரியாகச் செய்திருக்கிறார் சமுத்திரகனி.
ஒரேயொரு காட்சியில் வந்தாலும் பிரமானந்தத்தின் அலப்பறை மனதை லேசாக்குகிறது.
ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, வென்ணிலா கிஷோர் என கதையின் தேவைக்கேற்ப நடித்திருப்பவர்களின் நடிகர் நடிகைகளில் லிஸ்ட் ரொம்பவே நீளம்.
தமன் இசையில் இரண்டு பாடல்களில் உற்சாகம் கரை புரள்கிறது. பின்னணி இசை கதையோட்டத்துக்கு பொருத்தம். பாடல் காட்சிகளில் ஷங்கரின் டெம்ப்ளேட் பிரமாண்டம் துளியும் குறையவில்லை.
ரயிலிலும், வாக்கு எண்ணிக்கை மையத்திலும் நடக்கிற சண்டைக் காட்சிகள் தாறுமாறு தக்காளிச் சோறு ரகம். அமைத்திருப்பவர்கள் அன்பறிவ்.
திருவின் ஒளிப்பதிவு காட்சிகளை பெரிதாக்கியிருக்கிறது.
இதெல்லாம் நிஜத்தில் நடக்க வாய்ப்பேயில்லை எனும்படியான காட்சிகள், காட்சிகளில் லாஜிக் மீறல்கள் என்றிருந்தாலும் பரபரப்பான திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது.
கேம் சேஞ்ஜர் _ ரிஸ்னெஸில் வின்னர்; ரீச்சில் ரன்னர்!
-சு.கணேஷ்குமார்