அப்பாவி மெட்ராஸ்காரன் புதுக்கோட்டைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு படாதபாடுபடும் கதை.
நாளை திருமணம் என்ற நிலையில், தனக்கு மனைவியாகப் போகிற பெண்ணைப் பார்க்க காரில் கிளம்புகிற மெட்ராஸ்காரனான சத்யா ஒரு கர்ப்பிணிப் பெண் மீது மோதிவிடுகிறான். அடுத்த நிமிடமே அந்த பெண்ணின் சொந்த பந்தம், ஊர்மக்கள் என பெருங்கூட்டம் கூடி அவனை போட்டுப் பொளக்க, பெண்ணின் கணவனும் அண்ணனும் கொலைவெறியோடு தாக்க, அவன் உயிருடன் தப்பிப்பது சாத்தியமில்லை என்றாகிவிடுகிறது. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என சிக்கல்கள் சூழ்ந்து கொள்கிறது. அதிலிருந்து அவனால் மீள முடிந்ததா, இல்லையா என்பது மிச்சசொச்ச பரபரப்பான கதை… இயக்கம் வாலி மோகன் தாஸ்
சத்யாவாக சமீபத்திய மலையாளப் படங்களில் கவனம் ஈர்த்து வருகிற ஷேன் நிகம். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும், மருத்துவச் செலவுகளை ஏற்பதாக சொல்லியும் தன்னை கொன்றழிக்கத் துடிப்பவர்களிடம் அவதிப்படும்போது ஐயோ பாவம் என்றிருக்கிறது. படம் முழுக்க ஆத்திர ஆவேசத்துடனே சுற்றிக் கொண்டிருப்பதால் மற்ற உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவார் என்பது தெரியாமல் போகிறது.
கதாநாயகியாக நிஹாரிகா. எப்போது காதலித்தார்கள், எப்படியெல்லாம் காதலித்தார்கள் என்பதை காண்பிக்காததால் அவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரியை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த குறையைப் போக்குவதற்காக ரஹ்மானின் காதல் சடுகுடு பாடலை ரீமேக் செய்து, அதில் காதல் ஜோடியை ஆட விட்டிருக்கிறார்கள்; நிஹாரிகாவை கவர்ச்சி காட்ட வைத்திருக்கிறார்கள்.
கார் விபத்தில் சிக்கியவராக ஐஸ்வர்யா தத்தா. அவருக்கான ஆரம்பக் காட்சிகளில் பரிதாபமாக தென்படுபவர் கிளைமாக்ஸில் எதிர்பாராத செயலைச் செய்வது அதிர்ச்சி தருகிறது.
கலையரசனுக்கு அறிவை ஓரங்கட்டிவிட்டு அரிவாளைத் தூக்கி கொலையரசனாக திரிகிற வேலை. தெனாவட்டுப் பேச்சாலும் திமிரான நடையாலும் தன் பாத்திரத்தை பலமாக்கியிருக்கிறார்.
நாயகனின் தாய் மாமாவாக வருகிற கருணாஸின் பங்களிப்பு தனித்து தெரிகிறது. அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக பாண்டியராஜன், அத்தையாக தீபா சங்கர், என இன்னபிறர் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையிலிருக்கும் அதிரடி கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பு தர, ‘தை தக்கா கல்யாணம்’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது.
ஒளிப்பதிவு நேர்த்தி.
எங்கோ தொடங்கி, எங்கெல்லாமோ போய் சுற்றிக் கொண்டிருக்கிற கதையின் போக்கை இயக்குநர் சற்றே இழுத்துப் பிடித்திருக்கலாம்.
‘ஒரு சிறு கவனக் குறைவு வாழ்க்கையை சிதைந்து விடும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாய் உருவாகியிருக்கிற இந்த படத்தின் மூலம் ‘வாகனங்களை ஓட்டுகிறபோது போன் பேசக்கூடாது’ என்ற விழிப்புணர்வை எடுத்துக் கொண்டு திரும்பலாம்.