சாய் பல்லவி, கார்கி என்ற கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கார்கி.’ பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் கவுதம் ராமசந்திரன், ”என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் சொல்வீர்கள். சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடித்துக் கொடுத்தார்” என்றார்.
நடிகை சாய் பல்லவி, ”சாய் பல்லவியால் தான் இப்படம் சிறப்பாக இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது. நான் என் பங்களிப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையை படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குனர் கெளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார்.
ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். அப்போது அவரும் இதில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன். எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் நேரில் பார்த்ததில் எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கூட தெரியவில்லை. நான் சூர்யா சாரின் மிகப்பெரிய விசிறி. அவரைப் பார்த்து உறைந்து போனேன்” என்றார்.
நடிகை ஐஸ்வர்யலட்சுமி பேசும்போது, ”மூன்று வருடங்களாக கார்கியுடன் பயணித்து இருக்கிறேன். ஆனால், இயக்குனர் கெளதம் ராமசந்திரன் 4 வருடங்கள் போராடியிருக்கிறார். சாய் பல்லவி இல்லாமல் கார்கி இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்” என்றார்.
படத்தை வெளியிடும் சூர்யா – ஜோதிகாவின் 2D நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர், சூர்யா இப்படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு இப்படத்தை நாமே வெளியிடுவோம் என்று சொன்னார்” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் பேசும்போது, ”எனக்கு படத்தை திரையிட்டுக் காண்பித்தபோது, ஆரம்பித்ததில் இருந்து, நான் பின் தொடர்ந்தது சாய் பல்லவியின் கண்களைத்தான் தான். அதில் அத்தனை உணர்ச்சிகளை கொண்டு வந்து பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இறுதி காட்சி சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இந்த படத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது. ஒரு திகில் படத்தில் கூட இந்தளவுக்கு தாக்கம் இருக்குமா என்று தெரியாது” என்றார்.
நடிகர் காளி வெங்கட், ”ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார்” என்றார்.

