நூறு சதவிகிதம், இல்லையில்லை ஆயிரம் சதவிகிதம், இல்லையில்லை லட்சம் சதவிகிதம்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சதவிகிதம் அஜித் ரசிகர்களை வைப் மோடுக்கு கொண்டு போவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் படம்.
ஏ கே மும்பையில் பெரிய கேங்ஸ்டர். அவர் கேங்ஸ்டராக இருப்பதை வெறுக்கும் அவரது மனைவி ரம்யா, அவர்களுக்கு பிறந்த குழந்தையைக்கூட தொடக்கூடாது என அவரை தடுக்கிறார். மனம் உடைந்துபோகும் ஏ கே, செய்த குற்றங்களுக்கான தண்டனை அனுபவிக்க சிறைக்குச் செல்கிறார். அதுவரை Bad ஏ கே வாக இருந்தவர், Good ஏ கே வாக மாறுகிறார். சிறைக்குப் போகும்போது பிறந்த மகன் வாலிபனாகும் காலம் வரை தண்டனை அனுபவித்து விடுதலையாகிறார். அந்த நேரமாகப் பார்த்து மகனுக்கு பேராபத்து காத்திருக்க, ஏகே தனது Bad முகத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம்; கூடவே Ugly அவதாரமும் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு நடப்பதெல்லாம் அட்டகாசம்தான்; அமர்க்களம்தான்…
ஏ கே’வாக அஜித்குமார். கேங்ஸ்டராக செய்கிற சம்பவங்கள், சிறையில் கைதிகளின் அராஜகங்களை கட்டுப்படுத்தும் சம்பவம், மகனை சிறைவைத்த கேங்ஸ்டர்களை கண்டறிந்து கதறவிடும் சம்பவம், விஜய் ஸ்டைலில் டயலாக் பேசி இன்டர்வல் விடும் சம்பவம் என படம் முழுக்க அஜித்தின் சம்பவங்கள் நிரம்பியிருக்க தியேட்டர்கள் இடிந்துவிழுகுற அளவுக்கு ரசிகர்களின் உற்சாகத்தில் அதிர்கிறது.
ஏ கே’வை கொன்றழிக்கத் திட்டமிடுவது அவரிடம் பல்பு வாங்குவது என்ற இரு வேலைகள்தான் அர்ஜுன்தாஸுக்கு. அதை ஜாலியாகவும் கேலியாகவும் இரு மடங்கு உற்சாகத்துடனும் செய்திருக்கிறார்.
கெட்ட கணவனை நல்ல கணவனாக மாற்றும் முயற்சிகளை முன்னெடுக்கும் த்ரிஷா, ஏ கே’வின் தளபதியாக களமாடும் தெலுங்குதேச சுனில், ஏகேவை மாமா மாமா என்றழைத்துக் கொண்டு குட்டி தாதாவாக வலம்வரும் பிரசன்னா என சிலர் படத்தின் சில பகுதிகளைத் தாங்கிப் பிடித்திருக்க உலகமகா தாதா ரேஞ்சுக்கு அட்டனன்ஸ் போட்டு சட்டென ஆஃப் ஆகிறார் ஜாக்கி ஷெராஃப்.
வில்லனுடன் சகவாசம் வைத்துக்கொள்ளும்போது அழகாகவும், அந்த சகவாசத்துக்கான தண்டனையை பெறுகிறபோது பரிதாபமாகவும் தோன்றுகிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.
ஏ கே’வின் மகன் விஹானாக வருகிற கார்த்திகேயா தேவ் பாசம், கோபம், ஆதங்கம், நெகிழ்ச்சி என விதவிதமான உணர்வுகளுடன் சுற்றிச் சுழன்றிருக்க, ரெடின் கிங்ஸ்லி பிளவுஸ் போட்டுக்கொண்டு ஆடவும், யோகிபாபு ஏனோதானோவென்று வந்துபோகவும் பயன்பட்டிருக்கிறார்கள்.
ஷாயாஜி ஷின்டே, சிம்ரன், டார்க்கி நாகராஜா, ஷைன் டாம் சாக்கோ என ஒருசிலர் கெஸ்ட் ரோல்களில் எட்டிப் பார்க்கிறார்கள்.
இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, வித்யாசாகரின் ‘தொட்டுத்தொட்டு பேசும் சுல்தானா’ என பழைய பாடல்களை ஆங்காங்கே எடுத்துப்போட்டு எனர்ஜியை எகிற வைத்திருக்கிறார்கள். ‘இளமை இதோ இதோ’ பாடலோடு கடந்தோடும் சண்டைக் காட்சிக்காகவே இன்னொரு முறை படத்தைப் பார்க்கலாம். அம்புட்டு ஒர்த்து.
பின்னணி இசையில் தாறுமாறாய் வெறித்தனம் ஏற்றியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் ‘திரையரங்கம் செதறட்டும்’ பாடலை நிஜமாகவே திரையரங்கை செதறவிடும் விதத்தில் கொடுத்திருக்கிறார்.
அதிரடி ஆக்சனுக்கும் அசத்தலான வின்டேஜ் மூடுக்கும் பொருத்தமாக அமைந்திருக்கிறது அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு.
ஆயிரமாயிரம் ரங்கோலிகள் தோற்றுப்போகிற அளவுக்கு, வானவில்லும் ஆச்சரியமாய்ப் பார்க்கிற அளவுக்கு அத்தனை கலர்ஃபுல்லாக இருக்கின்றன அஜித் அணிந்துவரும் காஸ்ட்யூம்கள். அதன் பின்னாலிருக்கும் உழைப்பு அனுவர்தனுடையது.
பில்லா அஜித்தை, மங்காத்தா அஜித்தை, ரெட் அஜித்தை, வீரம் அஜித்தை, வாலி அஜித்தை, தீனா அஜித்தை… இன்னும் பல அஜித்தை திரையில் தோன்றச் செய்து ரசிகர்களைக் கிறங்கடித்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், கதையில் புதுமை கிதுமை என ஏதும் தென்பட்டுவிடக்கூடாது என்கிற உறுதியை கடைசி வரை கடைப்பிடித்திருக்கிறார்.
குட் பேட் அக்லி _ ரசிகர்கள் கொண்டாடுவார்கள் டெபனட்லி!
-சு.கணேஷ்குமார்

