கட்ஸ் சினிமா விமர்சனம்

கதாநாயகன் நேர்மையான போலீஸ் ஆஃபீஸர் என்றால் அந்த கதைகள் எப்படியிருக்கும்?

அந்த ஆஃபீஸர் 24 மணி நேரமும், தான் பொறுப்பேற்றிருக்கும் வழக்கின் குற்றவாளி யாராக இருக்கும் என அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகிற பணபலமுள்ள, அரசியல் பலமுள்ளவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டுதான் மறுவேலை என துடித்துக் கொண்டிருப்பார்.

அநியாயம் செய்வது எத்தனை பவர்ஃபுல் ஆசாமியாக இருந்தாலும் இழுத்து வந்து ஒரு மணி நேரமாவது அவரது ஸ்டேசன் லாக்கப்பில் அடைத்து வைப்பார்.

அப்படி அவர் யார் மீது கை வைக்கிறாரோ அவர்கள், அவரது குடும்பத்தினரை கொடுமைபடுத்தி பரலோகத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

பெரிய பெரிய ரவுடிகளை, தாதாக்களை ஒரு கான்ஸ்டபிளைகூட துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் தனியாகச் சென்று பாழடைந்த பில்டிங்கில் அல்லது பின்னிமில்லில் சந்தித்து அடிபட்டு மிதிபட்டு ரத்தத் சகதியில் உருள்வார்.

நீதிமன்றம் மூலமாக எதையும் கிழிக்க முடியாது என்ற நிலை உருவானால் சட்டத்தைக் கையிலெடுத்துக் ‘கொல்வார்.’

அப்படிப்பட்ட ஆஃபீஸர் ரங்கராஜ். மனைவி, மகள் என உற்சாக வாழ்க்கை வசித்து வருகிறார். அர்ஜுன் தேவ் என்ற ஒரு இளைஞனை, அரசு அதிகாரி ஒருவரை கொன்ற குற்றத்துக்காக கைது செய்கிறார். கொன்றவன் கரன்ஸியில் மிதப்பவன். அவனை நீதிமன்றத்துக்கு அனுப்பி தண்டிக்க முடியவில்லை. கைது செய்த ரங்கராஜை அவன் தண்டிக்க முடிவெடுக்கிறான்.

இப்படி வழக்கமான ‘டெம்ப்ளேட்’டில் நகரும் கதை, அர்ஜுன் தேவின் அப்பாவுக்கும், போலீஸ் ஆஃபீஸர் ரங்கராஜின் தந்தைக்கும் பல வருடங்கள் முன் இருந்த பகை, அதற்கான காரணம் என டிராக் மாறுகிறது.

அந்த பகை உருவான விதம், அதனால் ரங்கராஜின் அப்பா அம்மாவுக்கு நடந்த கொடுமைகள் என பிளாஷ்பேக் விரிகிறது.

தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கிற ரங்கராஜ். விவசாயியாக வரும்போது விளை நிலங்களின் வளத்தை அழிக்கத் திட்டமிடும் கார்ப்பரேட் வில்லனை துணிச்சலாக எதிர்க்கிறார்; போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும்போது கொலைக் குற்றவாளியை சுறுசுறுப்பாக சுளுக்கெடுக்கிறார். மனைவி(கள்) மீதான பாசத்தில் உருக வைக்கிறார்; ரொமான்ஸில் கிறங்கடித்து கிறங்கும் காட்சிகளும் உண்டு. எல்லா பங்களிப்பும் பாஸ்மார்க் கொடுக்கிற அளவிலேயே இருக்கிறது.

சில மாதங்கள் முன் ‘லீக்’கான வீடியோவில், உடலின் எல்லா பாகங்களையும் காட்டியதாக சொல்லப்பட்ட ஸ்ருதி நாராயணன் இந்த படத்தில் ரவுடியிஸம் செய்யும் போலீஸை தைரியமாக எதிர்ப்பது, பிரசவ வலி துவங்கிய நிலையில் வில்லன் கும்பலிடம் மாட்டி அவதிப்படுவது என பாராட்டும்படியான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

இன்னொரு கதாநாயகி நான்ஸியின் அழகும் புன்னகையும் அசத்துகிறது. தேகத்தில் கேரளத்து செழுமை நிரம்பியிருக்கிறது. கேரக்டருக்கு பொருத்தமாக நடிக்கவும் வருகிறது.

தங்கை மகன் மீதான பாசத்தை கனிவாகவும் வில்லன் மீதான கோபத்தை கம்பீரமாகவும் காட்டியிருக்கிறார் தாய் மாமனாக வருகிற சாய் தீனா.

கார்ப்பரேட் வில்லன்கள் எதையெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் உருட்டலும் மிரட்டலுமாக செய்திருக்கிறார் பிரவீன் மஞ்ரேக்கர்.

பிர்லா போஸ், டெல்லி கணேஷ், அறந்தாங்கி நிஷா காவல்துறை அதிகாரிகளாக வந்துபோகிறார்கள். ஸ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பில் குறையில்லை.

ஜோஸ் பிராங்ளின் இசையில் ‘இணையாய் துணையாய்’ பாடல் செவிகளை வருடுகிறது. பின்னணி இசையில் விசேஷமாய் ஏதும் தெரியவில்லை.

தன் பங்களிப்பால் காட்சிகளின் தரத்தை உயர்த்த முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ்.

படத்தில் பிரதிபலிக்கிற ‘மண்ணையும் மொழியையும் காக்க வேண்டியதும், அதற்கு ஆபத்து வரும்போது போராட வேண்டியதும் நம் கடமை’ என்ற இயக்குநரின் எண்ணம் பாராட்டுக்குரியது. கதையிலும் திரைக்கதையிலும் புதிய அம்சங்கள், யூகிக்க முடியாத விஷயங்கள் இல்லையென்பது ஏமாற்றத்துக்குரியது.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here