சைபர் கிரைம் சார்ந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர்…
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதை தொழிலாக வைத்திருப்பவன் எரித்துக் கொலை செய்யப்பட, கொலையாளி யார் என்பதை கண்டறிய வருகிறார் காவல்துறை உயரதிகாரி வினய். விஷுவல் மீடியாவில் பணிபுரிகிற திரிஷா கொலைகாரனை நேரில் பார்த்த சாட்சியாக இருக்கிறார். அவர் அடையாளங்களைச் சொல்லச் சொல்ல வரைகிறார் படத்தின் ஹீரோ டொவினோ தாமஸ். வரைந்தபின் பார்த்தால், அந்த வரைபடத்திலிருப்பது டொவினோ தாமஸ்.
கதை இப்படி தொடங்க, தவறு செய்பவர்களை ஹீரோ தண்டிப்பது சகஜம் என்பதால் அவர்தான் போட்டுத் தள்ளியிருப்பார் என நினைக்கிறோம். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக காட்சிக்கு காட்சி டிவிஸ்ட் காத்திருக்க, புதுப்புது கேரக்டர்ஸ் உள்ளே வர, கதை ஏரோபிளேனில் ஏறி தாறுமாறான வேகத்தில் டேக் ஆப் ஆகிறது.
கதையின் போக்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என தெளிவாகப் புரியாமல் லேசாக தலை சுற்ற வைத்தாலும் விறுவிறுப்புக்கு துளிகூட பஞ்சமில்லை.
ஹீரோ யார்? நடந்த கொலைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? கொலை செய்யப்பட்டவனின் பின்னணி என்ன? என்பதற்கெல்லாம் பதில் தருகிறது இயக்குநர்கள் அகில் பால் – அனஸ்கான் அமைத்திருக்கும் திரைக்கதை
டொவினோ தாமஸ் இன்டர்வல் வரை ஐஸ் கட்டியில் ஊறியதுபோல் விறைப்பாக நடமாடுகிறார். அதன்பின் ஸ்கை மார்சலாக ஆபத்திலிருந்து விமானப் பயணிகளைக் காப்பாற்றும்போது நடிப்பில் காட்டும் கம்பீரம் கவர்கிறது. வில்லனுடன் மோதும் சண்டைக் காட்சி மிரள வைக்கிறது.
வழக்கமான மசாலாப் பட ஹீரோயின்கள் போலில்லாமல் துடிப்பான மீடியா பர்சனாக, குற்றவாளியை அடையாளம் காட்டிவிட வேண்டும் என்ற தவிப்பைச் சுமந்தவராக உயிரோட்டமான நடிப்பைத் தந்திருக்கிறார் திரிஷா.
காவல்துறை உயரதிகாரியாக வருகிற வினய் தோற்றத்தில் ஸ்மார்ட்னஸ், வில்லத்தனத்தில் மிரட்டல் என கலந்துகட்டி களமாடியிருக்கிறார்.
ஷம்மி திலகன், அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள். அத்தனைப் பேரும் கேரக்டர்களின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளித்திருப்பது நடிப்பில் தெரிகிறது.
ராக்கெட் சீறிப் பாயும் வேகத்தில் அதிரிபுதிரியான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். காட்சிகளின் பிரமாண்டத்தை அதிகரித்துக் காட்டியிருக்கிறது அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு. எடிட்டருக்கு வேலை அதிகம்; அதை சரியாய் செய்திருக்கிறார்.
மறைத்து வைக்கப்படும் கேமராக்களால் பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுக்கும் கேவலமானவர்களைச் சுற்றிச் சுழலும் கதைகளை முன்பே பார்த்திருந்தாலும், இந்தளவுக்கு அதிரடியான திரைக்கதையில் பார்ப்பது, அதுவும் மலையாளத் திரையுலகிலிருந்து என்பது புது அனுபவம்!