‘ஜீவி’ படத்தில் ‘முக்கோண தொடர்பியல் விதி’ எனும் பார்முலாவில் கதை, திரைக்கதை உருவாக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் பாபுதமிழ், ‘உளவியல் ஃபேண்டஸி திரில்லர்‘ என்ற புதிய கதைக்களத்தை கையாண்டிருக்கும் படம்.
கதையின் நாயகன் யோகேஷ் கால்ப்பந்தாட்ட வீரர். தனது துறையில் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடிப்பதற்கான படிக்கட்டில் ஏறிக் கொண்டிருப்பவர். அவர் ஒருநாள் விளையாட்டுப் போட்டியொன்றில் பங்கேற்கும்போது கீழே விழ நேர்ந்து, தலையில் அடிபடுகிறது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, தான் ஒரு கொலைச் சம்பவத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார். ஆனால், அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லையென போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்படுகிறது. தலையில் அடிபட்டதால் சற்றே அவருக்கு மனநலம் பிசகியிருக்கலாம் என்பதுபோல் மனைவி உட்பட சிலர் சந்தேகப்பட, அதே சந்தேகம் அவருக்கே வருகிறது.
உண்மையில் கொலை நடந்ததா? ஆம் எனில் அதை யார் செய்தது? கொலை நடக்கவில்லையெனில், அப்படியொரு சம்பவத்தை அவர் பார்த்ததாக சொல்வதன் காரணம் என்ன? அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கான விடைகளை ஒவ்வொன்றாய் விடுவிக்கிறது திரைக்கதை!
லட்சணமாக இருக்கிற புதுமுக நாயகன் யோகேஷ் அலட்டலில்லாத நடிப்பால் ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான கம்பீரத்தை வெளிப்படுத்த அவரது உடற்கட்டு உதவி செய்கிறது.
உருண்டு திரண்ட முகம், கவிதை பேசும் கண்கள், புன்னகையில் காந்தம் என கலக்கல் காம்போவாய் நாயகி அனிகா விக்ரமன். படம் முழுக்க சேலை கட்டிய குத்துவிளக்கு… டூயட் பாடலில் அவர் போடும் குட்டிக் குட்டி உடையும், அதில் திமிரும் இளமையும் விழிகளுக்கு விருந்து!
முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம். ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் ஏகப்பட்ட இடைவெளி விட்டுப் பேசும் அவரது வழக்கமான வசன உச்சரிப்புக்கேற்ற பாத்திரம். அதனாலோ என்னவோ கச்சிதமாகப் பொருந்துகிறார்.
‘ஆடுகளம்’ நரேன், மதன்பாப் என பழகிய முகங்களும் படத்தில் உண்டு.
ஒரு காட்சியில் உளவியல் நிபுணராக வருகிற ஒய். ஜி. மகேந்திரா, உண்மையில் யார் என வேறொரு காட்சியில் வெளிப்படுத்துவது கதையோட்டத்தின் முக்கிய திருப்பம்!
கவாஸ்கர் அவினாஷ் இசையில் அந்த டூயட் பாட்டு இனிமை. ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தில் துரோகம், கொலை, பழிவாங்கல், காதல், டூயட், அப்பா மகள் பாசப்பிணைப்பு என எல்லாமும் உண்டு. ஆனாலும் புரிந்துகொள்ள சிரமப்படுத்துகிற சிக்கலான திரைக்கதை… நீங்கள் அப்படியான கதைகளை விரும்புகிறவரா? ஆம் எனில் ‘க்‘ உங்களுக்கான படம்!