அழுத்தமான படைப்புகளை ஆழமான காட்சிகளால் நெசவு செய்கிற இயக்குநர் வசந்தபாலனின் கிட்டத்தட்ட அதேவிதமான மற்றுமொரு முயற்சி!
‘அரசாங்கத்திடம் சேரியை ஒழிக்கச் சொன்னால், சேரிவாழ் மக்களை ஒழிக்கிறது’ என்ற இயக்குநரின் கோபமே படத்தின் ஒன்லைன்!
அந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் இளைஞர்கள் இரு தரப்பாகப் பிரிந்து கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வு. அதனால் அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் வீசும் புயல் எந்தளவுக்கு வலுவானது, எத்தனை வலியானது என்பதை பதிவு செய்யும் ‘ஜெயில்‘
உழைப்பு, சம்பாத்தியம் எதிலும் கவனம் செலுத்தாமல் திருடிப் பிழைப்பதும் போதையில் மிதப்பதுமாய் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ். அந்த பாத்திரத்தின் நகலாய், ஜீ.வி.பிரகாஷின் நண்பனாக ராக்கி என்ற பாத்திரத்தில் (இசையமைப்பாளர் சிற்பியின் மகன்) நந்தன் ராம். சேரிவாழ் இளைஞர்களாக ஏற்ற பாத்திரத்துக்கு முடிந்தமட்டும் ஜீவனூட்டியிருக்கிறார்கள்.
இளைஞர்களின் அடிதடி கொலையில் முடிவது, அவர்கள் போலீஸில் சிக்குவது, போதைப்பொருள் கடத்த இளைஞர்களை போலீஸ் பயன்படுத்துவது என கதையோட்டத்தின் கன்னாபின்னா அத்தியாயங்களில் கமர்ஷியல் மசாலா தூக்கல்!
நாயகனுக்கு ஜோடியில்லாவிட்டால் எப்படி? இருக்கிறார்… விடலைப் பருவம், புடலை தேகம் வெள்ளந்திச் சிரிப்பு, முத்தக் காட்சியில் அளவில்லா அர்ப்பணிப்பு என அட்டகாச அட்டனன்ஸ் போட்டிருக்கிறார் அபர்நதி!
சுயநலத்துக்காக எதையும் செய்கிற போலீஸ் உயரதிகாரியாக ரவிமரியா, ஜி.வி. பிரகாஷின் அம்மாவாக ராதிகா, வழிதவறிய வாழ்க்கையிலும் உழைத்துப் பிழைக்க முயற்சிக்கும் கலை கதாபாத்திரத்தில் பசங்க பாண்டி என படத்தின் அத்தனை நடிகர் நடிகைகளின் பங்களிப்பும் நேர்த்தி!
சமூகப் போராளியாக முத்துக்கருப்பன் என்ற பாத்திரத்தில் வருகிற படத் தயாரிப்பாளர், சினிமா மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் கவனிக்க வைக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் ஏழு பாடல்கள்… ‘காத்தோடு காத்தானேன்’ பாடலில் தனுஷ் – அதிதிராவ் குரலில் வழியும் உருக்கம் காதுக்கு நெருக்கம்!
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம்!
அதற்கு இடம் தேவை, இதற்கு இடம் தேவை என காரணம் சொல்லி, தலைமுறை தலைமுறையாய் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி மக்களை அவ்வப்போது வெளியேற்றி, அவர்களுக்கு நகரத்துக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் வசிப்பிட வசதி செய்து கொடுப்பது அரசாங்கத்தின் வழக்கம். அத்தகைய குடியிருப்பு வளாகங்களை ‘ஜெயில்’ என குறிப்பிட்டு அதற்கான காரணங்களை அலசுவதே படத்தின் நோக்கம்!
காலங்காலமாய் வாழ்ந்த இடத்திலிருந்து வெளியேறி, பழக்கமில்லாத பகுதியில் குடியேறும் மக்களுக்கு உரிய வேலை கிடைப்பதில் சிக்கல் தொடர்வதும், அதனால் தீய வழியில் பணம் சம்பாதிக்கத் தூண்டப்பட்டு வழக்கு, விசாரணை, தண்டனை என வாழ்நாள் தொலைவதும் வழக்கம். மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைக்காக வெகுதூரம் செல்லவேண்டிய சூழ்நிலை அது இதுவென இடமாற்றம் செய்யப்படும் மக்கள் சந்திக்கும் அவலங்களின் அணிவகுப்பு பெரிது. அந்த வலிகளை, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர் மூவர் கூட்டணியின் எழுத்தாக்கம் ஓரளவு மட்டுமே பதிவு செய்திருக்கிறது!

