யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள படம்.
யோகிபாபு நடித்திருப்பதால் காமெடி படமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இதில் காமெடி கலாட்டாக்கள் கிடையாது.
யோகிபாபு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிப்பதுண்டு. அந்த வரிசையில் இன்னொரு படமா என்றால், அதுவுமில்லை.
சரி போகட்டும்… ஃபேமிலி சப்ஜெக்டா?
உம்ஹூம். அதற்கான அம்சங்கள் படத்தில் தென்படவில்லை.
‘பழி வாங்கும் கதையா?’
ம்… கிட்டத்தட்ட அப்படித்தான்.
யோகிபாபு மேஜிக் கலைஞர். அந்த துறையில் பெரியளவில் புகழ்பெற விரும்புகிறார். அதற்கு சில தடைகள் உருவாகிறது. அதை சமாளிப்பதற்குள், இரண்டு மூன்று ரவுடிப் பேர்வழிகள் அவரிடம் தொடர்ந்து சின்னச்சின்னதாக பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை மேஜிக் நிகழ்ச்சி நடத்த முடியாதபடி முடக்கிப்போடும் அளவுக்கு சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
இதற்கிடையில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்.
அந்த சம்பவத்தை செய்தவர்களை கண்டுபிடிக்க போலீஸ் களமிறங்கியிருக்கும் சூழ்நிலையில் யோகிபாபு காணாமல் போகிறார்.
காணாமல் போன அவருக்கு என்னவானது என்பது மீதிக் கதை. இயக்கம் வினீஷ் மில்லினியம்
மேஜிக் நிகழ்ச்சியில் உபகரணம் பழுதடைவதால் மக்களிடம் அடிபடுதல், அதே விவகாரத்துக்காக போலீஸில் மிதிபடுதல் என ஆரம்பக் காட்சிகளே ரணகளமாக அமைந்துவிட அதற்கேற்ற நடிப்பால் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார் யோகிபாபு. தன்னை தொழில் செய்யவிடாமல் முடக்கிப் போட்டவர்களை பழிவாங்கும்போது ஆத்திர ஆவேசத்தை இன்னும் கொஞ்சம் வீரியமாக காட்டியிருக்கலாம்.
யோகிபாபுவுக்கு ஜோடியாக வருகிற சாந்தி ராவ் உடலளவில் கனமாக இருக்கிறார். புன்னகையால் கவர்பவர் நடிப்பளவில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் செய்யவில்லை.
ரவுடிகளாக வருகிறவர்களை பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் பில்டப் கொடுக்கிறார்கள். ‘நாங்க அந்தளவுக்கு ஒர்த் இல்ல; குவாட்டர் அடிக்க பர்ஸ் திருடுபவர்கள்’ என்பதுபோல் இருக்கிறது அருவி பாலா அன்ட் கோ’வின் ஃபெர்மாமென்ஸ்.
ஹரிஷ் பெராடி காவல்துறை உயரதிகாரியாக கம்பீரமாக சில காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார்.
விக்ரம் பட ஏஜெண்ட் டீனாவுக்கு இந்த படத்தில் மீனா என்பது கதாபாத்திரப் பெயர். காவல்துறை அதிகாரியாக வருகிற அவர் யோகிபாபுவை தேசவிரோதிபோல் நடத்துவது டூ… மச்.
ஜிதின் கே ரோஷனின் பின்னணி இசை இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பூட்டுகிறது. எஸ் என் அருணகிரியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
எப்படி பார்த்தாலும் அழகாக தெரிகிற மலைப் பிரதேசத்தை மது அம்பட்டின் கேமரா கோணங்கள் கூடுதல் அழகாக்கியிருக்கிறது.
மேஜிக் கலைஞன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பழிவாங்குகிற எளிய கதை. பாதிக்கப்பட்டவர் யார் என்பதை, அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பதை, பாதிப்புக்கு காரணம் யாரெல்லாம் என்பதை ஒளிவு மறைவின்றி வரிசையாக காட்டிவிடுவதால் கதையோட்டத்தில் பரபரப்பு, சஸ்பென்ஸ் என பெரிதாக ஏதுமில்லை.
ஆறுதலாக, அந்த பழிவாங்கலில் ஒரு தருணம் மேஜிக் சமாச்சாரங்களோடு இணைந்ததாக இருப்பது சுவாரஸ்யம். அதேபோன்ற சுவாரஸ்யம் ஆங்காங்கே பின்னிப் பிணைந்திருந்தால் படம் பார்க்கும்போது ‘போரா இருக்குதே’ என நெளியாமல் ஜோரா கைய தட்டியிருக்கலாம்!
-சு.கணேஷ்குமார்