பாவம் செய்தவன் தான் படம் எடுக்க வருவான்; ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான்! -‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் கே. ராஜன் காட்டம்

‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘காசேதான் கடவுளடா.’ ஆர். கண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கடந்த மார்ச் 21-ம் தேதி நடந்தது.நிகழ்வில் ‘மிர்ச்சி’ சிவா, “கண்ணன் சார் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும். அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்த படத்தை விட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு சார், கருணாகரன் என இந்த படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது, “இன்று தம்பி கண்ணன் நல்ல தயாரிப்பாளர், இயக்குநர். ஒருகாலத்தில் ராமநாராயணன் போல தொடர்ந்து படங்களை எடுத்துக்கொண்டே இருப்பார் இப்படி படங்கள் எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். அப்படியானால் நான் படமே எடுக்க மாட்டேன், இயக்குவேன் என்று சொன்னார். நல்ல முடிவு. படம் தயாரிப்பது போன்ற ஒரு தண்டனை வேறு எதுவும் இல்லை. பாவம் செய்தவன் தான் படம் எடுக்க வருவான் என்பது புது மொழி. தயாரிப்பாளர்களை வாழ வைக்க சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாதது. இன்று எந்த படம் ஓடும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயம். ஆனால் மக்கள் நல்ல படத்தை பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. ‘லவ் டுடே’ சமீபத்திய உதாரணம். இன்னும் மூன்று வருடத்திற்கு கண்ணன் படங்கள் திட்டமிட்டு கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான். அதனால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் தலைப்பைப் போல படம் வெற்றியடைந்து பணம் கொட்ட வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் கண்ணன், “போன மாதம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியானது. இந்த மாதம் ‘காசேதான் கடவுளடா’ வெளியாக இருக்கிறது. சினிமா இன்று இருக்கக்கூடிய சூழலில் மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எனக்கு பலருடைய ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி! மிர்ச்சி சிவா நீண்ட கால நண்பர். இப்போதுதான் இருவரும் படம் இணைந்து வேலை செய்ய சூழ்நிலை அமைந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘பம்மல் கே சம்மந்தம்’ படம் போல, இந்தப் படம் ஜாலியான ஒன்றாக இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here